'இனி நீ கவியருவி என்று அழைக்கப்படுவாய்!'- குரங்கருவிக்கு வனத்துறை பெயர் மாற்றம்

0 4172

கோவை குரங்கருவிக்கு , "கவியருவி" என்று வனத்துறையினர் பெயர்மாற்றம் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில், உள்ளது குரங்கருவி. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி ,வால்பாறை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.பொள்ளாச்சியிலிருந்து ,30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த இடம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.

இந்த அருவிக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். பல மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் மக்கள் குடும்பத்துடன் வந்து உல்லாசமாக இந்த அருவியில் குளித்து மகிழ்வர். கொரோனா நோய் தொற்றால், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், குரங்கருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் , தடை நீக்கப்பட்டு , சுற்றுலா பயணிகள் மீண்டும் வர தொடங்கியுள்ளனர்.

தற்போது குரங்கருவி என்று அழைக்கப்படும் இந்த அருவி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கவியருவி என்று அழைக்கப்பட்டது. அருவியை சுற்றி பறவைக்கூட்டங்கள் எழுப்பும் ஓசை மிக அழகாக இருக்கும். பறவைகளின் இசையுடன் அருவியின் தாளமும் சேர்ந்து, கேட்போர் காதுகளில் கவிதையாய் பாயும்.

இதனால் இந்த அருவியை சுற்றி வாழ்ந்த மலைவாழ் மக்கள் சுமார் 500 வருடத்திற்கு முன் இந்த அருவிக்கு "கவியருவி" என்று பெயர்சூட்டி அவ்வாறே அழைத்துவந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நாளடைவில், இங்கு குரங்குகள் அதிகளவில் வரத்தொடங்கியது. இதனால் இந்த அருவிக்கு குரங்கருவி என்ற பெயரும் வந்தது.

இந்நிலையில், குரங்கருவிக்கு "கவியருவி" என்று வனத்துறையினர் பெயர்மாற்றம் செய்துள்ளனர்.

மேலும், சங்ககால இலக்கியங்களில் , குரங்கிற்கு பல பெயர்கள் உண்டு. அவற்றுள் "கவி" என்ற பெயர் தேர்தெடுக்கப்பட்டு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments