கேரளா : மாம்பழ சின்னத்தைக் கண்டு அலறல்... அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைக்கும் ட்வென்டி 20!

0 6733

கேரளாவில் ட்வென்டி 20 என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தேர்தல்களில் போட்டியிட்டு கலக்கி வருகிறது. சமீபத்தில்,  நடந்து முடிந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் 4 பஞ்சாயத்துகளில் ட்வென்டி 20 சார்பாக போட்டியிட்டவர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் கீழக்கம்பளம் என்ற கிராமத்தில் கிட்டெக்ஸ் கார்மென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு துணிகளை ஏற்றுமதி செய்து வரும், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சாபு எம். ஜேக்கப் என்பவர் உள்ளார். இவருக்கு, அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை கிடையாது. இதனால், கீழக்கம்பளம் கிராமத்தில் ட்வென்டி 20 என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். கீழக்கம்பளம் கிராமத்தில் பல்வேறு நலப்பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டது. கிராமத்துக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி, மருத்துவ வசதி, திருமண மண்டபம், விவசாயிகளுக்கு உதவி , திருமணத்துக்கு நிதியுதவி, மலிவு விலையில் மளிகை பொருள்கள் , என ட்வென்டி 20 அமைப்பின் மக்கள் நலப்பணி நீண்டது.முக்கியமாக மக்களுக்கு கடவுளின் இல்லம் என்ற பெயரில் அழகான கேரள மாடல் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. 

image

இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு கேரள உள்ளாட்சி தேர்தலில் ட்வென்டி 20 அமைப்பைச் சேர்ந்தவர்கள் கீழக்கம்பளம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டனர். இந்த அமைப்புக்கு இரட்டை இலையுடன் கூடிய மாம்பழம் சின்னமாக ஒதுக்கப்பட்டது . போட்டியிட்ட  19 வார்டுகளில் 17 இடங்களில் ட்வென்டி 20 அமைப்பினர் வெற்றி பெற்றனர். இதனால், அரசியல் கட்சிகள் அதிர்ந்து போயின. கார்ப்பரேட் நிறுவனம், பஞ்சாயத்து நிர்வாகத்தை நடத்துவதா? என்றும் விமர்சனம் எழுந்தது. ஆனாலும், ட்வென்டி 20 அமைப்பினர் மக்கள் பணியில் தொய்வில்லாமல் பார்த்து கொண்டனர். இதனால், மக்கள் மத்தியில் ட்வென்டி 20 அமைப்புக்கு ஆதரவு பெருகியது. இதன் விளைவாக, சமீபத்தில் நடந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் கீழக்கம்பளம் மட்டுமல்லாமல் பக்கத்து பஞ்சாயத்துகளான அய்யக்கரநாடு , குன்னத்தநாடு, மழவனுர் பஞ்சாயத்துகளிலும் ட்வென்டி 20 போட்டியிட்டது. இதில், மீண்டும் கீழக்கம்பளம் பஞ்சாயத்தில் 19 வார்டுகளிலும் இந்த அமைப்பு வெற்றி பெற்றது. அதோடு, அய்க்கரநாடு பஞ்சாயத்தில் 9 வார்டிலும் குன்னத்தநாடு , மழவனுர் பஞ்சாயத்தில் தலா 5 வார்டுகளிலும் ட்வென்டி 20 அமைப்பை சேர்ந்தவர்கள் வெற்றி கண்டு அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

image

சாதாரணமாக, கிராம பஞ்சாயத்து தலைவருக்கு கேரளாவில் ரூ. 7,000 சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், ட்வென்டி 20 அமைப்பை சேர்ந்த பஞ்சாயத்து தலைவருக்கு ரூ. 25000 சம்பளமாக கிடைக்கும். துணைத் தலைவருக்கு ரூ. 20,000 , கவுன்சிலர்களுக்கு ரூ.15,000 சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் , மக்கள் பணிகள் செம்மையாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதாக  ட்வென்டி 20  அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாபு எம். ஜேக்கப் நம்புகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கீழக்கம்பளம் மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.172 கோடி செலவிடப்பட்டதாகவும் இந்த உள்ளாட்சி தேர்தலில் தங்கள் அமைப்புக்கு கிடைத்த வெற்றி அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதை காட்டுவதாகவும் சாபு எம். ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து , சட்டமன்ற தேர்தலிலும் இந்த அமைப்பு போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் ட்வென்டி 20 அமைப்பின்  வெற்றியும் வளர்ச்சியும்  அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments