திரும்பும் திசையெங்கும் வெள்ளம்.. தத்தளிக்கும் கடலூர் மாவட்டம்..! ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

கனமழையால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 15ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகியுள்ளது. தெருக்கள் மற்றும் வீடுகளில் தேங்கியுள்ள மழைநீரால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தாழ்வான இடங்களில் உள்ள சுமார் 15ஆயிரம் வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்குள்ள மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். சுமார் 75ஆயிரம் பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அங்கேயே முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
தொடர் கனமழையால் கடலூர் மாவட்டத்திலுள்ள 228 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மாவட்டத்தின் பெரிய ஏரியான வீராணம் ஏரி நிரம்பி, வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காட்டுமன்னார்கோவிலில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளம் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நெல், வேர்க்கடலை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. விளை நிலங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
வெங்கடேசபுரம், மடப்புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து அங்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பலர் விவசாய காப்பீடு செய்யாததால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments