கனமழையால் தளும்பும் கடலூர் மாவட்டம்..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகள், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பரவலாகப் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. திட்டக்குடி, பெண்ணாடம், முருகன்குடி, வடகரை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்டவை நீரில் மூழ்கின.
பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றில் கடலூர் - அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண்பாதை நீரில் மூழ்கியதால், 15க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திட்டக்குடி மற்றும் வேப்பூர் தாலுகாக்களில் உள்ள தெத்தேரிபாதை, செளந்திரசோழபுரம், கோட்டைக்காடு, பெண்ணாடம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்து, மூலவர் சன்னிதி முதல் கோவில் உட்பிரகாரம் முழுவதும் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் மழை நீர் சாலையில் ஓடுவதால் பண்ருட்டி - கும்பகோணம் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
கல்குணத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, விவசாய நிலங்கள் கடல் போல் காட்சியளிக்கின்றன. கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு பெய்து வரும் கனமழையாலும், மழைநீர் செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததாலும் விவசாய நிலத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
ஆண்டுதோறும் மழையின் போது இதுபோன்ற நிலையே தொடர்வதாகவும், வடிகால்களை தூர்வார வேண்டுமென அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த பரதம்பட்டு மற்றும் அதனை ஒட்டிய மேலும் இரண்டு கிராமங்கள், மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. இதனையடுத்து அங்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
Comments