வேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் - பிரதமர் மோடி

வேளாண்துறைச் சீர்திருத்தங்களின் பயன்களை வருங்காலங்களில் தான் பார்க்கவும் உணரவும் முடியும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தனது சொந்தத் தொகுதியான வாரணாசி முதல் பிரயாக்ராஜ் வரை விரிவாக்கப்பட்ட ஆறுவழிச் சாலையைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், புதிய நெடுஞ்சாலை, மேம்பாலங்கள், சாலை விரிவாக்கத் திட்டங்களால் போக்குவரத்து நெரிசல் குறையும் எனத் தெரிவித்தார். வாரணாசியில் சரக்குப் பரிமாற்றகம் உள்ளதால் காய்கறிகள், பழங்கள், மலர்களைப் பெருமளவில் சேமித்து வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவதாகக் குறிப்பிட்டார்.
வேளாண்துறைச் சீர்திருத்தங்களால் விவசாயிகளுக்குச் சட்டப் பாதுகாப்பும், அதிக விலை கிடைக்கும் இடத்தில் தங்கள் விளைபொருட்களை விற்பதற்கான சுதந்திரமும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். வேளாண்துறைச் சீர்திருத்தங்களின் பயன்களை வருங்காலத்தில் தான் உணர முடியும் எனத் தெரிவித்தார்.
உற்பத்திச் செலவைப் போல் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் எனக் கூறிய உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளதையும் மோடி நினைவுகூர்ந்தார்.
கங்கையாற்றில் படகில் சென்ற பிரதமர் மோடி, காசி விசுவநாதர் கோவில் தாழ்வாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாரணாசி படகுத் துறையில் இருந்து காரில் காசி விசுவநாதர் கோவிலுக்குச் சென்ற மோடி, கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்குப் பால், தேன், பன்னீர் ஆகியவற்றை ஊற்றி அபிசேகம் நடத்தி வணங்கி வழிபட்டார்.
Comments