டெல்லியை முற்றுகையிட டிராக்டர்களில் புறப்பட்ட விவசாயிகளை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைப்பு

போராட்டம் நடத்த டெல்லிக்குச் செல்ல முயன்ற விவசாயிகளைக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிப் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக டிராக்டர்களிலும் மற்ற வாகனங்களிலும் ஆயிரக்கணக்கானோர் டெல்லியை நோக்கி அணிவகுத்துச் சென்றுள்ளனர்.
டெல்லி - அரியானா எல்லையில் சிங்கு என்னுமிடத்தில் அவர்களைக் காவல்படையினர் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இருப்பினும் அந்த இடத்தைவிட்டு விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி - குருகிராம் எல்லையில் வாகனங்களைத் தடுத்துநிறுத்திக் காவல்துறையினர் சோதனையிட்டதால் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Comments