தத்தளிக்கும் தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..! ஏரியை வளைத்தவர்களால் வினை

0 10533
தத்தளிக்கும் தனி வீடுகள்.. குளமான அப்பார்ட்மென்டுகள்..! ஏரியை வளைத்தவர்களால் வினை

நிவர் புயலின் தாக்கத்தால் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளான கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மழை நீர் வெள்ளம் போல புகுந்துள்ளது. ரியல் எஸ்டேட் அதிபர்களின் பேராசைக்கு பலிகடாவாகி தண்ணீரில் தத்தளிக்கும் சொந்த வீட்டுக்காரர்களின் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

நிவர் புயல் தாக்கத்தால் கொட்டீத்தீர்த்துவரும் கனமழைக்கு சென்னையின் வேளச்சேரி ராம் நகர், விஜய நகர், புறநகர் பகுதிகளான கிழக்கு தாம்பரம், முடிச்சூர் வரதராஜபுரம், ஊரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையான நிகழ்வாக மாறிவருகின்றது.

போதிய மழை நீர் வடிகால்கள் இருந்தும் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் வேளச்சேரி ராம்நரில் சாலையில் கார் செல்கிறதோ இல்லையோ பருவமழைக்கு தவறாமல் படகு செல்வது வாடிக்கையான நிகழ்வாக மாறிப்போயுள்ளது.

இதனால் தங்கள் கார்களை முன் எச்சரிக்கையுடன் வேளச்சேரி பாலத்தில் வரிசைகட்டி நிற்கவைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

லட்சங்கள் கொடுத்து வாங்கிய நிலத்தில் பார்த்து பார்த்து கட்டிய வீடுகளை சுற்றி ஒவ்வொரு மழைக்காலமும் வெள்ள நீர் தேங்குவதை அரிந்தும் அதனை விற்கவும் முடியாமல், விட்டுச்செல்லவும் முடியாமல் திக் திக் மன நிலையுடன் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.

கூடுவாஞ்சேரி ஏரி மற்றும் நந்திவரம் ஏரிகள் நிரம்பினால் தண்ணீர் அடையாற்றிற்கு பாய்ந்தோட வசதியாக அகலமான வடிகால் இல்லாததால் ஊரப்பாக்கம் அருள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாய்ந்து ஓடி அங்குள்ள மக்களை வெள்ளத்தில் தவிக்கவிட்டுள்ளதாக ஊரப்பாக்கம் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதே போல முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதிகளிலும் ஏரிகள் நிரம்பி கழிவு நீருடன் கலந்து வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேற இயலாமல் தவித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள்.நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்துள்ள மழை நீருடன் மீன்களும் நீச்சல் அடித்து வருகின்றது.

நகருக்குள் தேங்கி இருக்கின்ற மழை நீர் சில மணி நேரங்களில் வடிந்து விடும் என்றாலும் புற நகர் பகுதிகளில் தனி வீடுகட்டிச் சென்ற மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவாகி தங்கள் சொந்த வீடுகளை விட்டு அகதிகளாக உறவினர்கள் வீடுகளை தேடிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் 

சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு கேட்டடு கம்யூனிட்டி என்று லட்சங்களை கொட்டி பிளாட்டுகளை விலைக்கு வாங்கி குடியிருந்துவரும் தாமரைக்குளம் என்று பெயரிடப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்தத்திற்குள் மழை நீர் புகுந்ததால் கார்கள் சாலையில் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது

வங்கியில் கடனை பெற்று சொந்தமாக வீடு வாங்கி குடியிருந்தாலும் மழை காலங்களில் அகதிகளாக அவதியுறும் இந்த நிலைக்கு முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் அதிபர்களின் பேராசையே காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர் வீட்டு உரிமையாளர்கள், இந்த பகுதியில் நீர் தேங்கும் என்று தெரிந்திருந்தும் தரைமட்டத்தை உயர்த்தி கட்டாமல் வழக்கம் போல கட்டி தங்களை தண்ணீரில் தவிக்கவிட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னைக்கு மிக அருகில்... அல்லது சென்னையில் வீடுவாங்க வேண்டுமா ? நல்ல மழை காலங்களில் வீடு தேடிச்செல்லுங்கள் அப்போது தான், மழை தண்ணீரால் கண்ணீர் வடிக்கும் நிலை வராது என்று சுட்டிக்காட்டுகின்றனர் விபரம் அரிந்தவர்கள்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments