இரு நாட்களாகக் கனமழை..! குளம்போல் தேங்கிய மழைநீர்

0 3290
இரு நாட்களாகக் கனமழை..! குளம்போல் தேங்கிய மழைநீர்

சென்னையில் இரு நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாகச் சென்னையில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. கோயம்பேடு காந்தி தெருவில் உள்ள மெட்டுக்குளம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் அப்பகுதி வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. 

சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே பெரியமேடு சாலையில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால்  வாகனங்கள் விரைவாகச் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டது. தேங்கிய மழைநீரில் மிதந்தபடி வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

காசிமேடு, ராயபுரம், வண்ணார்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளிலும் கனமழை பெய்தது. வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இன்னல் அடைந்தனர்.

அண்ணாசாலை ஓரம் உள்ள தர்க்காவில் மரம் சாய்ந்து விழுந்ததால் கூரை சேதமடைந்தது. அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

அசோக் நகரில் சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றியதால் போக்குவரத்து சீரானது.

புயலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னையில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் அனைத்தையும் அகற்ற மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் ராம்நகர் உள்ளிட்ட இடங்களில், கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியிருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தரைதளத்தில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில், இருமருங்கிலும், வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேளச்சேரியில் சில பகுதிகளில் கனமழை பெய்தால், மழைநீர் தேங்கும்.

இதனால், தாழ்வான பகுதிகளில் வசிப்போரில், வாகனம் வைத்திருப்போர், தங்கள் வாகனங்களை, வேளச்சேரி மேம்பாலத்தின் மேற்பகுதியிலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும், பாதுகாப்பாக நிறுத்தி வைப்பார்கள்.

இந்த வகையில், தற்போது, நிவர் புயல் எதிரொலியாக, கனமழை கொட்டித்தீர்ப்பதால், ஏராளமான வாகனங்கள், வேளச்சேரி மேம்பாலத்தில்,  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments