வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி நாளை புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும்

தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி அருகே தீவிர புயலாக நாளை கரையைக் கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதுச்சேரியிலிருந்து 440 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 470 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்திற்குள் புயலாக மாறும் என்றும், மேலும் வடமேற்கு நோக்கி நகன்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. நாளை மாலை தீவிரப் புயலாக காரைக்கால் - மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு அதிகபட்சம் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் அடுத்த இரு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுக்கோட்டை மற்றும் வட மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரு நாட்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments