சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : எண்ணூர் ஆய்வாளர் கைது

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 15 வயது மகளை, வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்ல, வியாசர்பாடியில் வசிக்கும் உறவினரான கணவரைப் பிரிந்து வாழும் சகிதா பானுவிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் சகிதாபானு, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி துன்புறுத்தியதாகவும், மகளை கண்டுபிடித்து கொடுக்குமாறும் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார்.
ஆய்வாளர் ப்ரியதர்ஷினி, விசாரணை நடத்தியதில், வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்த மதன்குமாருடன் சகிதாபானுவுக்கு பழக்கம் இருப்பதும், இவர்கள் இருவரும் பெண்கள் மற்றும் சிறுமிகளை அவர்களின் வறுமையை பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் மதன் குமாரின் தாயார் செல்வி, தங்கை சத்தியா ஆகியோரும் 15 வயது சிறுமியை மிரட்டி துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து இவர்கள் 4 பேரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் இதில் சம்பந்தப்பட்ட விபசார புரோக்கர்களான புதுவண்ணாரப்பேட்டை கார்த்திக், திருவொற்றியூர் மகேஸ்வரி, வனிதா, பூந்தமல்லி விஜயா, முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா மற்றும் முஸ்தபா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
புரோக்கர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படி வண்ணாரப்பேட்டை ஜெகன்நாதன் தெருவைச் சேர்ந்த 44 வயதான ராஜேந்திரனை கைது செய்து விசாரித்தபோது, கடந்த செப்டம்பர் மாதம் சிறுமியை வரவழைத்த ராஜேந்திரன் தனது நண்பரான எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தியுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
தொடர் விசாரணையில் ஆய்வாளர் புகழேந்தி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதால், காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால் உடனடியாக புகழேந்தியை பணியிடை நீக்கம் செய்ததோடு சட்ட நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் புகழேந்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் ஆய்வாளரே இதுபோன்ற படுபாதகச் செயலில் ஈடுபட்டது வேலியை பயிரை மேயும் செயல் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Comments