மதுரையில் தொடரும் தீ விபத்துக்கள் - காரணம் என்ன?

0 972

பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பால் கோவலன் மாண்டான். வெகுண்ட எழுந்த கண்ணகி நீதி கேட்டுப் போராடி மதுரையை எரித்தாள். இது இலக்கியம் படைத்த கதை. ஆனால், இன்று அவ்வப்போது மதுரையில் தீ பிடித்து எரிவது தொடர் கதையாகிவிட்டது.

சொக்கநாதரும் மீனாட்சியும் ஆட்சி செய்யும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகிலேயே தெற்கு மாசி வீதியில், தீபாவளிக்குப் பிறகு மூன்று முறை தீவிபத்து நடந்துவிட்டது. தீபாவளி அன்று தெற்கு மாசி வீதியில் தீ விபத்து ஏற்பட்டு, கட்டிடம் இடிந்து விழுந்து இரண்டு தீயணைக்கும் படை வீரர்கள் இறந்தனர். மீண்டும் மதுரையில் 3 மாடிக் கட்டிடத்தில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. 

மதுரை தெற்கு மாசி வீதியில் பைசர் அகமது என்பவருக்குச் சொந்தமான ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோன் உள்ளது. தரைதளத்தில் ஜவுளிக்கடை மற்றும் மேல் மூன்று தளங்களில் ஜவுளி குடோன் என இருந்த இந்த 3 மாடி கட்டிடத்தில் நேற்று, அதிகாலை 4 மணிக்குத் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் தண்ணீர் வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுப் போராடி கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். இந்தத் தீயில் பல லட்சம் மதிப்பிலான ஜவுளி,ரெடிமேட் ஆடைகள் எரிந்து நாசம் ஆகியுள்ளன. மதுரை தெற்கு மாசி வீதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது மதுரை வாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை தெற்கு மாசி வீதி, அடுத்தடுத்து கட்டிடங்கள் நிறைந்த நெருக்கடியான பகுதியாக இருக்கிறது. மேலும் இங்கே அதிகமாக நிறைந்து உள்ள ஜவுளிக் கடைகள் பல, விதிகளை மீறி கட்டப்பட்டவையாகவும் இருக்கலாம் என்றும் அதனாலும் இந்த மாதிரியான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று கருதப்படுகிறது. தீ விபத்துகள் குறித்து, மதுரை விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கூடிய விரைவில் இந்த மாதிரியான தீ விபத்துக்கள் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், மதுரை எரியாமல் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments