பா.ஜ.க. கூட்டணி தொடரும்.! இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அறிவிப்பு.!

0 3713

தமிழ்நாட்டில், ஆளும் அதிமுக ஆட்சி இப்போதும், வருங்காலங்களிலும் தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி, வரும் தேர்தல்களிலும் தொடரும் என முதலமைச்சரும், துணை முதல்வரும் அறிவித்துள்ளனர். 

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி ஆலோசனையில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பிற்பகலில் சென்னை வந்தார். விமான நிலையத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். 

இதைத் தொடர்ந்து, சாலையில் இருமருங்கிலும் திரண்டிருந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமித் ஷா, காரில் இருந்து இறங்கி நடந்து கை அசைத்து தொண்டர்களின் வரவேற்பை ஏற்றார். 

பின்னர், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற, முடிவுற்ற திட்டங்களின் தொடக்க விழா, மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் அமித் ஷா பங்கேற்றார். 380 கோடி ரூபாய் மதிப்பிலான கண்ணன்கோட்டை - தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கம் உள்ளிட்ட 67,758 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அமித் ஷா தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித் ஷா, உலகின் தொன்மையான மொழிகளில், முதன்மையான மொழியான தமிழ் மொழியில் உரையாற்ற முடியாதது, தமக்கு வருத்தம் அளிப்பதாக கூறி, தனது பேச்சைத் தொடங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் தலைமையிலான அதிமுக அரசு, இப்போதும், எதிர்காலத்திலும், தமிழ்நாட்டில் தொடரும் என அமித் ஷா நம்பிக்கைத் தெரிவித்தார்.

மத்திய அரசு எப்போது எந்த திட்டத்தை அறிவித்தாலும், தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதாக, எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிப்பதாக அமித் ஷா கூறினார். ஆனால், மத்தியில் 10 ஆண்டுகள், காங்கிரசோடு கூட்டணியில் இருந்தபோது, திமுக தமிழகத்திற்கு செய்தது என்ன என்பதை பட்டியலிட முடியுமா? என, அமித் ஷா கேள்வி எழுப்பினார். 

தேசிய அளவில் பரம்பரை அரசியலை மோடி ஒழித்திருப்பதுபோல், வாரிசு அரசியலை ஒழித்திருப்பது போல், தமிழ்நாட்டிலும், குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும் என அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.  

முன்னதாக விழாவில் பேசிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "நடந்தாய் வாழி காவிரி" திட்டம், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு திட்டங்களுக்கு, மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்க வேண்டும் என்றார். அதிமுக - பாஜக இடையிலான வெற்றிக் கூட்டணி, வரும் தேர்தலிலும் தொடரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

முன்னதாக, விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் தேர்தல்களிலும், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments