‘மூன்று நாள்களாகப் பட்டினி’ - தவித்த விற்பனைப் பிரதிநிதி சிறுவனுக்கு உதவிய குமரிக்காரர்!

0 3433

ன்னியாகுமரியில், விற்பனைக்குக் கொண்டுவந்த பொருள்கள் எதுவும் விற்பனையாகாததால், அழுதுகொண்டே பசிக்கு உணவு கேட்ட சிறுவனுக்கு உணவளித்து, மனிதநேயத்தோடு சொந்த ஊருக்குக் குமரியைச் சேர்ந்த ஒருவர் அனுப்பி வைத்துள்ளார்...

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், 18 வயதாகும் கணபதி. 10 ம் வகுப்பு வரை படித்துள்ளார். தாய் மற்றும் தந்தை கூலி வேலை பார்த்து வரும் நிலையில், குடும்ப வறுமை காரணமாக மூன்று வருடங்களாகச் சித்தாள் வேலை பார்த்துள்ளார். பிறகு, கன்னியாகுமரி, குமாரகோயில் பகுதியில் இயங்கும் தனியார் விற்பனை அங்காடியின் விளம்பரத்தைப் பார்த்து, அதில் விற்பனைப் பிரதிநிதியாகச் சேர்ந்துள்ளார். அவர்கள் தரும் பொருள்களை வீடு வீடாகச் சென்று விற்பதே கணபதியின் வேலை.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பொருள்களை எடுத்துச் சென்று வீடு வீடாக விற்றுள்ளார். தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள மணிகண்டன் என்பவர் வீட்டிலும் பொருள்களை விற்க முயற்சி செய்துள்ளார். அவர்கள், பொருள்கள் எதுவும் வேண்டாம் என்று அனுப்பி வைத்தனர். அப்போது, அந்த சிறுவன் அழுதபடியே சென்றுள்ளான். சிறுவன் அழுதுகொண்டு செல்வதைப் பார்த்த மணிகண்டன் அழைத்து விசாரித்துள்ளார்.

’வேலை செய்யும் இடத்தில் விற்பனை நடைபெற்றால் ஒருவேளை உணவு மட்டுமே தருவதாகவும், விற்பனை எதுவும் நடைபெறவில்லை என்றால் பட்டினி போட்டுவிடுகிறார்கள். மூன்று நாள்களாகப் பட்டினி கிடக்கிறேன்’ என்று அழுதபடியே பசிக்கொடுமையை வெளிப்படுத்தியுள்ளான் கணபதி. இதையடுத்து கணபதிக்கு வயிறார உணவளித்த மணிகண்டன், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பணிபுரிவது குறித்து புகார் அளித்தார். மேலும், சிறுவனுக்குப் பணம் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

புகார் குறித்து, தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பசியால் அழுத சிறுவனுக்கு உணவளித்த மணிகண்டனின் மனித நேய செயலைப் பலர் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments