பள்ளி திறக்காததால் மாணவிகளின் செல்போனில் சேட்டை..! பள்ளி வேன் ஊழியர் கைது

0 21418
பள்ளி திறக்காததால் மாணவிகளின் செல்போனில் சேட்டை..! பள்ளி வேன் ஊழியர் கைது

பள்ளிகள் திறக்கப்படாததால், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் மாணவ-மாணவிகள் பாடங்களை கற்றுவரும் நிலையில், செங்கல்பட்டு அருகே தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வேனின் உதவியாளர் ஒருவர் மாணவிகளின் செல்போன்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி சாட்டிங்கிற்கு கட்டாயப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள், வீட்டில் இருந்த படியே மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் வகையில் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன. இதனால் பணியிழப்புக்கு உள்ளான பள்ளி வேன் மற்றும் பேருந்துகளில் வேலைபார்த்த ஊழியர்களை மாற்றுப்பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு அடுத்த செய்யூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவி ஆன்லைன் வகுப்பிற்காக செல்போனுடன் இருந்தபோது, ஒரு எண்ணில் இருந்து தொடர்ந்து ஆபாச படங்கள் அனுப்பபட்டுள்ளன. பள்ளி உடற்பயிற்சி ஆசிரியரின் பெயரை அதில் குறிப்பிட்டு, தன்னுடன் வாட்ஸ் அப்பில் சாட்டிங்கிற்கு வருமாறு அழைப்பு விடுத்து குறுந்தகவலும் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் மிரண்டு போன அந்த மாணவி, உடனடியாக தனது பெற்றோரிடம் இது குறித்து சொல்ல அவர்கள் இது தொடர்பாக செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த செல்போன் நம்பரை வைத்து விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர். அந்த மாணவி படிக்கும் பள்ளியின் வேன் ஓட்டுனருக்கு உதவியாளராக வேலைப்பார்த்து வந்த சூசை சத்யராஜ் என்பவன் தான் வைத்துள்ள செல்போனில் மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பி சாட்டிங் செய்ய கட்டாயப்படுத்தி தொந்தரவு அளித்தவன் என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சூசை சத்யராஜை சுற்றிவளைத்த காவல்துறையினர் அவனது செல்போனை வாங்கி ஆய்வு செய்த போது கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த செல்போனில் உள்ள வாட்ஸ் அப் எண்ணில் இருந்து பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பெயரில் 5 ஆம் வகுப்பு தொடங்கி 8 ஆம் வகுப்பு வரை ஏராளமான மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு அவன் ஆபாச படங்களை அனுப்பி சாட்டிங்கிற்கு நிர்பந்தித்து வந்ததை கண்டறிந்தனர்.

உண்மையில் உடற்பயிற்சி ஆசிரியர் என நினைத்து சில மாணவிகள் அவனிடம் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்ததாகவும் கூறப்படுகின்றது. பள்ளியில் விசாரித்த போது, ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கும் போது சம்பந்தப்பட்ட மாணவிகளின் செல்போன் நம்பர்களை தனது செல்போனில் பதிந்து வைத்து, இதுபோன்ற வில்லங்க சேட்டையில் அவன் ஈடுபட்டு வந்ததை கண்டறிந்தனர் காவல்துறையினர்.

இதையடுத்து பள்ளிச்சிறுமிகளின் படிப்பை வக்கிரமாக்கிய சாத்தான் சூசை சத்யராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாணவிகளின் வாட்ஸ் அப் எண்கள் சம்பந்தமில்லாத நபர்களின் கைக்கு சென்றால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இது போன்ற அநாகரீகமான செயலுக்கு பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரின் பெயரை பயன்படுத்துகிறான் என்றால் அவரும் மாணவிகளிடம், இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறாரா ? என்பது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவிகளின் வாட்ஸ் அப் எண்களின் ரகசியத்தை காக்க தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments