வடகிழக்குப் பருவமழை தீவிரம்.. தென், டெல்டா மாவட்டங்களில் கனமழை..!
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், அருவியில் இருந்து பெருகி ஓடும் வெள்ளம் குற்றாலநாதர் கோவிலின் முன்புறமும் பெருகி ஓடுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் ஊரணியில் உடைப்பு ஏற்பட்டதால் பெருகிய காட்டாற்று வெள்ளத்தில் 2 பெண்கள் சிக்கிக் கொண்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், பொறையார், தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கொடைக்கானலில் கடந்த 4 தினங்களாக மழை பொழிந்து வருவதால் நீர் நிலைகளின் அளவு நிறைந்து வருகிறது. கோசன் சாலை,பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் முறிந்து விழுந்த மரங்களை வனத்துறையினரும் நெடுஞ்சாலை துறையினரும் அகற்றி வருகின்றனர்.
நாகை, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று பகல் நேரத்தில் விட்டுவிட்டு மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் கோடம்பாக்கம், தியாகராய நகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. கோடம்பாக்கம் பகுதியில், தூய்மைப் பணியாளர் ஒருவர் இரவு நேரத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
Comments