தீவிபத்தில் கட்டடம் இடிந்தது... தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி

0 5400

மதுரை தெற்கு வாசலில் உள்ள துணிக்கடையில் அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டுக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கித் தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மேலும் இருவருக்குத் தனியார் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மதுரை தெற்கு வாசல் பகுதியில் சாலையின் இருபுறமும் துணிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.

தீபாவளியையொட்டி நேற்றுக் கடைகளில் குவிந்த மக்கள் இரவு 10 மணி வரை பொருட்களை வாங்கிச் சென்றனர். இன்று தீபாவளியையொட்டிக் கடைகள் அனைத்துக்கும் விடுமுறையாகும்.

இந்நிலையில் ஏ.கே.அகமது கடைக்கு எதிர்ப்புறம் நவ்பத் கானா தெருவில் உள்ள பாபுலால் துணிக்கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்து பத்துக்கு மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்புப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் தீயணைப்பு வீரர்கள் 4 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இவர்களில் கிருஷ்ணமூர்த்தி, சிவராஜன் உயிரிழந்தனர். கல்யாண குமார், சின்னகருப்பு ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து மதுரை விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தீபாவளியன்று தீவிபத்தில் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில்  காயமடைந்த இருவருக்குத் தலா மூன்று லட்ச ரூபாய் வழங்கவும், அவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கவும் உத்தரவிட்டுள்ளார்.

பழைமையான கட்டிடம் என்பதால் தீவிபத்தின்போது இடிந்து விழுந்து இருவர் உயிரிழப்புக்குக் காரணமாகிவிட்டதாகத் தீயணைப்புத்துறை டிஜிபி ஜாபர்சேட் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பழைமையான கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து, தீத் தடுப்பு வசதி செய்யாத கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜாபர்சேட் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments