ஆன்லைன் ரம்மியில் லட்சக் கணக்கில் கடன்.. களவாணியாக மாறிய காவலர்.. கைரேகையால் சிக்கினார்..!

0 16050
காவலர் உடையில் களவாணி... காட்டிக் கொடுத்த கைரேகை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரங்கேறிய நகைத் திருட்டு சம்பவங்களில் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டில் ஈடுபடுவதற்காகவே இரவுப் பணியை கேட்டு வாங்கிய போலீஸ்காரரின் களவாணித்தனம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

நெல்லை மாநகர் பெருமாள்புரம் பகுதியில் கடந்த மாதம் 10 ம் தேதி தங்கதுரை என்பவரது வீட்டில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருட்டுப் போனது.

அங்கு கிடைக்கப்பெற்ற கைரேகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர் கற்குவேலின் கை ரேகையோடு ஒத்துப்போய் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த கற்குவேல் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

அதன் பிறகு நடைபெற்ற விரிவான விசாரணையில் காவலர் கற்குவேலின் “திருட்டு” பின்னணி தெரியத் தொடங்கியது.

2017ஆம் ஆண்டு காவல்துறைக்குத் தேர்வாகி, மணிமுத்தாறு பட்டாலியனில் பயிற்சி முடித்து, ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிக்குச் சேர்ந்த கற்குவேல், பெரும்பாலும் இரவுப் பணியையே விரும்புவார் என்று கூறுகின்றனர் சக காவலர்கள்.

ஆடம்பர வாழ்க்கை, குறுக்கு வழியில் கோடீஸ்வரனாக வேண்டும் என்பன உள்ளிட்ட கனவுகளோடு சுற்றி வந்த கற்குவேல், புதிதாக வீடு ஒன்றையும் கட்டி வந்துள்ளார்.

அதற்கு தேவையான பணத்துக்காக ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும் ஈடுபட்டு வந்த கற்குவேல், அதில் ஏராளமான பணத்தை இழந்ததால்தான் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

ஆனால் அதனை மறுக்கும் போலீசார், அவருக்கு சிறு வயதில் இருந்தே திருட்டுப் பழக்கம் உண்டு என்கின்றனர்.

பகலில் கிடைக்கும் ஓய்வு நேரங்களின்போது, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு வரும் கற்குவேல், இரவில் காவலர் உடையுடன் சென்றே திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் என்கின்றனர் போலீசார்.

காவலர் சீருடையுடன் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் கற்குவேலை பார்ப்பவர்கள், பாதுகாப்புக்காக ரோந்தில் ஈடுபடும் போலீஸ் என எண்ணிக் கொள்வதால் அது அவருக்கு வசதியாகப் போயிருக்கிறது.

திருட்டில் ஈடுபடும் இடங்களில் கைரேகை பதியக்கூடாது என்பதற்காக கையுறை அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்த கற்குவேல், தப்பித் தவறி கைரேகை எங்காவது சிக்கிவிட்டால் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, வேலைக்கு சேரும் போது காவல்துறை பதிவேட்டில் பதிவு செய்யபட்ட கைரேகைகளை மாற்றவும் முயற்சி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இத்தனை விவரங்களும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, தூத்துக்குடி ஆயுதப்படை குடியிருப்பில் இருந்த காவலர் கற்குவேலை நெல்லை மாநகர குற்றப் பிரிவு சிறப்பு தனிபடையினர் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 15 சவரன் தங்க நகை, ஒரு கார் , ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவருடைய கூட்டாளிகள் 4 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

புனிதமான காக்கிச்சட்டையைப் போட்டுக்கொண்டு கற்குவேல் போன்ற ஒரு சிலர் செய்யும் களவாணித் தனங்களால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழுக்கு ஏற்படுவதாக சக காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments