வயலில் ஆடு மேய்ந்ததில் தகராறு... பாஜக நிர்வாகி டீ கடையில் வெட்டிக்கொலை..!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வயலில் ஆடு மேய்ந்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக, பாஜக நிர்வாகி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தென்திருப்பேரை, கோட்டூர் தெருவைச் சேர்ந்தவர் தாஸ். இவர் பாஜகவில் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்தார். இன்று காலை தென்கரையிலுள்ள டீ கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாஸை சரமாரியாக வெட்டினார். இந்தக் கொடூரத் தாக்குதலில் தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்ததும், கொலையாளி தான் கொண்டுவந்த வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.
தாஸ், வெட்டிக் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அங்குத் திரண்ட உறவினர்கள் குற்றவாளி விட்டுச்சென்ற வாகனத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, தாஸின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாசின் வயலில் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கி என்பவரது ஆடு மேய்ந்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாகவும், எனவே தாஸைக் கொலை செய்தது இசக்கிதான் என்றும் கூறப்படுகிறது. கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டீக்கடையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments