அமெரிக்காவுடன் நெருங்கும் இந்தியா... ஆனாலும் இந்தியாவுக்கு ரஷ்யா 'நண்பேன்டா!' - பின்னணியில் சுவாரஸ்யமான காரணங்கள்

0 17718

கடந்த 1962-ம் ஆண்டு சீன போருக்கு பிறகு, மீண்டும் இந்தியாவுக்கும் கம்யூனிச வல்லரசுக்குமிடையே உறவு சீர்குலைந்து கிடக்கிறது. அதே போல, கொரோனா பரவலுக்கு பிறகு, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மோதல் முட்டிக் கொண்டுதான் உள்ளது. தென் சீன கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா போராடிக் கொண்டிருக்கிறது. ஆசியாவை பொறுத்த வரை, சீனாவுக்கு அடுத்து வலிமையான நாடு அல்லது சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் திறன் கொண்ட நாடு என்று பார்த்தால் அது இந்தியா மட்டும்தான். இதனால், எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்ற பாணியில் அமெரிக்கா இந்தியாவுடன் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறது. முன்பு, தீவிரவாதத்தை வேரறுக்க பாகிஸ்தானுக்கு எப் - 16 ரக போர் விமானங்களை விளையாட்டு பொம்மை போல கொடுத்த அமெரிக்கா இப்போது, இந்தியாவுக்கு தான் தயாரிக்கும் எல்லா ஆயுதங்களையும் கொடுக்க தயாராகவே இருக்கிறது. அமெரிக்க இந்திய நட்பு வலுப்பட பிரதமர் மோடியின் ராஜயரீதியிலான அணுகுமுறை, ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதே வேளையில், அமெரிக்காவுடன் நெருங்கும் இந்தியாவுடனான நட்பு மற்றோரு வல்லரசு நாடான ரஷ்யாவுக்கு நெருடலை  ஏற்படுத்துகிறதா என்கிற கேள்வியும்  எழுகிறது அல்லவா? பனிப் போர் காலக்கட்டத்திலிருந்தே இந்தியா ரஷ்யாவின் நெருங்கி நட்பு நாடாக இருந்து வருகிறது. பனிப் போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்ட பிறகும், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா மாறிய பிறகும் , ரஷ்யா இந்தியாவின் நட்பை அதிகம் விரும்புகிறது என்பதே உண்மை.image

இதற்கு, பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்யும் மிகப் பெரிய கஸ்டமர் இந்தியா என்பது முக்கிய காரணமாக இருக்கிறது.இந்தியா ஒரு தனித்தன்மை நிறைந்த நாடு. சீனா, பாகிஸ்தான் மற்றும் அந்த நாட்டுடன் நெருங்கிய உறவு கொண்ட நாடுகளை தவிர்த்து பிற உலக நாடுகளுடன் இந்தியா நல்ல உறவை பேணி கொண்டிருக்கிறது. இந்திய விமானப்படையில்தான் ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்களை காண முடியும். வேறு எந்த ஒரு நாட்டின் விமானப்படையிலும் பார்க்க முடியாத ஒரு அம்சம் இது. ரஷ்ய தயாரிப்பு ராணுவ உபகரணங்களை வாங்கும் திறன் மற்ற நாடுகளுக்கும் இல்லை என்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ரஷ்யாவின் பொருளாதாரம் எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்தே அமைந்துள்ளது. ஆயுதங்களை விற்பதன் வழியாகவும் ரஷ்யா வருவாய் ஈட்டுகிறது அப்படியென்றால், வாங்கும் திறன் கொண்ட ஒரு நாட்டின் நட்பை இழக்க ரஷ்யா விரும்புமா? விரும்பாது அல்லவா. அதனால்தான், இந்தியா அமெரிக்காவுடன் அதிக நெருக்கம் காட்டினாலும் இந்தியாவின் நட்பை இழக்க ரஷ்யா விரும்பவில்லை. இதன் காரணமாகவே, ரஷ்யா தனது அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு தருகிறது. அதே வேளையில், சீனாவுக்கு அத்தகையை தொழில்நுட்பங்களை ரஷ்யா வழங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் அச்சுறுத்தலை மீறி இந்தியா ரஷ்யாவிடத்தில் ஆயுதங்களை வாங்குவதும் நம் நாடு அந்த நாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் நட்பையும் காட்டுகிறது. ரஷ்யாவிடத்திலிருந்து எஸ்.- 400 ரக ஏவுகணைகளை வாங்கியுள்ள துருக்கி நாட்டுக்கு அமெரிக்கா எப்- 35 ரக போர் விமானங்களை விற்க மறுத்துள்ளது. ஆனால், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்.- 400 ரக ஏவுகணை அமைப்பையும் வாங்கும். அமெரிக்காவிடத்திலிருந்து நவீன ஹெலிகாப்டர்களையும் வாங்குகிறது. ஏனென்றால், வாங்கும் திறன் மிகுந்த இந்தியாவை பகைத்துக் கொள்ள வல்லரசு நாடுகளே விரும்பவில்லை என்பதுதான் நிதர்சனமாக உண்மை.

தற்போது, சீனாவுடன் ரஷ்யா நல்ல உறவைத்தான் பேணி வருகிறது. எனினும், வருங்காலத்தில் ரஷ்யாவின் இறையாண்மைக்கு சீனா அச்சுறுத்தலாக மாறும் அபாயம் உள்ளது. ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியில் உள்ள விலாடிவோஸ்டோக் நகரம் தங்களுக்கு சொந்தமானது என்று சீன ஊடகங்கள் அடிக்கடி செய்தியை வெளியிட்டு வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வமாக  விலாடிவோஸ்டோக்  நகரத்துக்கு சீனா உரிமை கொண்டாட வாய்ப்புள்ளது. அதனால்தான், ரஷ்யாவின் அணுஆயுதங்கள் ஐரோப்பிய எல்லையை விடவும் சீன எல்லை பகுதியில்தான் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.image

இந்தியாவை போலவே சீனாவும் ரஷ்யாவின் முக்கிய கஸ்டமர். ரஷ்யாவிடத்திலிருந்து அதிகளவு மூலப்பொருள்களை சீனா இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவிடத்தில் நல்ல உறவை பேணுவதும் அவசியமாக உள்ளது. ரஷ்யாவில் பில்லியன் டாலர்களை சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. தற்போது, அந்த இடத்தில் இந்திய நிறுவனங்களை ரஷ்யா எதிர்பார்க்கிறது. காலப்போக்கில் சீனா எதிரியாக மாறினால் , அப்போது ரஷ்ய பொருளாதாரத்துக்கு இந்தியா கைகொடுக்கும் என்று அந்த நாடு நம்புகிறது. இதன் காரணமாகவே, இந்திய பிரதமர் மோடியை விலாடிவோஸ்டோக் நகருக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைத்தார். கடந்த ஆண்டு பிரதமர் மோடியும் அந்த நகருக்கும் விசிட் அடித்தார். அப்போது, ஒரு முக்கிய திட்டமும் தொடங்கப்பட்டது. அதுதான், சென்னை - விலாடிவோஸ்க் நகர கடல் பாதை திட்டம். விளாடிவோஸ்க் - சென்னை கடல்வழியில் ஜப்பான் கடல், கொரிய தீபகற்பம், தென் சீனக் கடல்,கிழக்கு சீனக் கடல், அந்தமான் வழியாக சென்னைக்கு வர முடியும்.

ரஷ்யாவிலிருந்து ஒரு சரக்குக் கப்பல் இந்தியா வந்தடைய ஒரு மாத காலம் பிடிக்கும். சிரமமான கடல் வழிப் பயணம் காரணமாக, நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவைவிட சீனாவுடன்தான் அதிகம் வர்த்தகம் புரிந்துவருகிறோம். கடந்த 2019 - ம் ஆண்டு, சீனாவுடன் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக வர்த்தகம் புரிந்துள்ளோம். ஆனால், ரஷ்யாவுடன் 2025-ம் ஆண்டுதான் 30 பில்லியன் டாலர்களுக்கு வர்த்தகம் உயரப்போகிறது. விலாடிவோஸ்டோக்  - சென்னை கடல்வழி உருவாக்கப்படும்போது ,அதன் தொலைவு, 5,600 (10.300 கி.மீ) நாட்டிக்கல் மைல்கள்தான். கிட்டத்தட்ட 3,000 கடல்மைல்கள் குறைந்துவிடுகிறது. மிகப்பெரிய சரக்குக் கப்பல், மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். அதனால், விலாடிவோஸ்டோக்கில் இருந்து சென்னைக்கு 10 முதல் 12 நாள்களில் வந்துவிடலாம். விளாடிவோக்ஸ் நகரத்தில் இந்தியா துணை தூதரகத்தையும் திறந்துள்ளது. ஆக.... சீனா உரிமை கொண்டாடும் என்று எதிர்பார்க்கப்படும் விலாடிவோஸ்டோக்  நகரில் இந்திய ஆதிக்கத்தை ரஷ்யா தெரிந்தே அனுமதித்துள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.image

இந்திய - ரஷ்ய உறவு என்பது சோவியத் யூனியன் காலத்திலிருந்தே மரபு வழியாக உருவானது. ரஷ்யாவுடன் எந்த உள்நோக்கமும் ஆதாயமும் தேடாமல் உண்மையான உறவு வைத்துள்ள மிகப் பெரிய ராணுவ பலம் கொண்ட நாடு இந்தியா என்பதை ரஷ்யா புரிந்து கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியா நெருங்கிய நட்பு நாடாக இருந்தாலும் எந்த காலத்திலும் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா திரும்பாது என்பதையும் ரஷ்ய தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.  இந்திய- ரஷ்ய உறவு கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிச்சயமாக தொடரும். ரஷ்யாவுடன் இந்தியா கொண்டுள்ள நட்பால்தான், அந்த நாடு சீனாவின் பக்கம் சாய்வதையும் தடுக்க முடிகிறது என்பதை இந்தியத் தலைவர்களும் புரிந்து வைத்துள்ளனர்.ஆனால், இத்தகைய நம்பிக்கை சீனா மீது ரஷ்யாவுக்கு நிச்சயம் கிடையாது. இதனால், காலத்துக்கும் இந்திய - ரஷ்ய உறவு தொடரும் என்று நம்புவோம்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments