அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்..

0 6726
அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 72.

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மூச்சு திணறல் காரணமாக கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி முண்டியபாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக 90 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டதால், உடல்நிலை தொடர்ந்து கவலைகிடமாக இருப்பதாகவும், நிமோனியா பாதிப்பில் உள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11:15 மணி அளவில் துரைகண்ணு உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அமைச்சரின் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு தமிழ்நாட்டுக்கும், குறிப்பாக அதிமுகவுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் வந்தனர். தொடர்ந்து ஆம்புலன்சின் உள்ளே துரைக்கண்ணுவின் உடல் இருந்த நிலையில், அதனருகே வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு முதலமைச்சரும், அமைச்சர்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைக்கண்ணுவின் இழப்பு தனக்கு வேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதாகக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து காலமான அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவர் சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது.

காலமான அமைச்சர் துரைக்கண்ணு 1948ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் பிறந்தவர் . இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். 2006, 2011, 2016ஆம் ஆண்டு என தொடர்ந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அ.தி.மு.க.வில் மாணவரணி, இளைஞரணி உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். பாபநாசம் ஒன்றியத்தின் அ.இ.அ.தி.மு.க செயலராகவும் துரைக்கண்ணு இருந்துள்ளார்.

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டித் தமிழக அரசு சார்பில் இன்று ஒருநாள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டிச் சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைக்கண்ணு உடல் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ராஜகிரியில் இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்குத் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராஜகிரியில் அமைச்சர் துரைக்கண்ணு வீட்டில் அவர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் பார்வையிட்டார். ராஜகிரி வன்னியடியில் உள்ள தோட்டத்தில் துரைக்கண்ணு உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளைத் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

ராஜகிரியில் உள்ள திடலில் அமைச்சர் துரைக்கண்ணு உடல் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே வைக்கப்பட்டிருந்த அவர் உருவப்படத்துக்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், அன்பழகன், சி.வி.சண்முகம், காமராஜ்,  ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், ரவீந்திரநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், கோவி.செழியன் உள்ளிட்டோரும் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments