தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

0 25967
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாடு முழுவதும், புதிய தளர்வுகளுடன் நவம்பர் 30ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்க்ப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் செயல்படவும், அரசியல் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றிற்கும், கட்டுப்பாடுகளுடன், அனுமதி வழங்கி அவர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாடு முழுவதும், தற்போதுள்ள பொது ஊரடங்கு, புதிய தளர்வுகளுடன், நவம்பர் 30ஆம் தேதி, நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில், வருகிற 16ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வகை கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வருகிற 16ஆம் தேதி முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும், வருகிற 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு அங்காடி வளாகத்தில், வருகிற 2ஆம் தேதி முதல், பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு அங்காடி வளாகத்தில், காய்கறி மற்றும் பழங்கள் சில்லறை வியாபார கடைகள் 3 கட்டங்களாக, வருகிற 16ஆம் தேதி முதல் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான சென்னை புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளில், ஒரே சமயத்தில், 150 பேர் வரையில் பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது, பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

மல்டி பிளக்ஸ் உட்பட அனைத்து வகை தியேட்டர்களும், 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி, வருகிற 10ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாக, முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அரசியல், மதம், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் உள்ளிட்ட கூட்டங்களை, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில் நடத்த, வருகிற 16ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், வருகிற 10ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகள், இறுதி ஊர்வலங்களில், ஏற்கனவே உள்ள தலா 50 நபர்களுக்கு பதிலாக, 100 நபர்கள் வரையில் கலந்து கொள்ள, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 50 வயது வரையிலானவர்களுடன், உடற்பயிற்சி கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது,ஞாயிற்றுக்கிழமை முதல், 60 வயது வரையிலான, வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கி, முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments