கொட்டித் தீர்த்த கனமழையால் தத்தளிக்கும் ஐதராபாத்... 2 வீடுகள் இடிந்து விழுந்து 13 பேர் பலி...

0 1183
கொட்டித் தீர்த்த கனமழையால் தத்தளிக்கும் ஐதராபாத்... 2 வீடுகள் இடிந்து விழுந்து 13 பேர் பலி...

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த திடீர் கனமழையினால் 2 வீடுகள் இடிந்து விழுந்து 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் அந்நகரமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 

 ஐதராபாத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்துக்கும் அதிகமாக இடைவிடாமல் திடீர் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பிறகு மழையின் தீவிரம் அதிகரித்து, விடிய விடிய வெளுத்து வாங்கியது.

இதனால் பெகம் பஜார், பெகும்பட், டோலிசவுக், சேய்க்பேட், மல்லாபூர், செர்லபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தாழ்வான இடங்களில் மழைநீர் பல அடி உயரத்துக்கு தேங்கியுள்ளது. தம்மாய்குடா பகுதியில் வெள்ளம் போல ஓடிய மழைநீரில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது.

டோலிசவுக் பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வீடுகளுக்குள் சிக்கியிருந்த மக்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்பு படையினரும் மீட்டனர்

பந்தளகுடா (Bandlaguda), காகன்பாகத் ஆகிய இடங்களில் மழையில் சேதமடைந்து 2 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 29.8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ள நிலையில், மழைநீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.

 

ஐதராபாத்தின் பாலக்நுமா பகுதியில் மழை வெள்ளத்தில் நபர் ஒருவர் இழுத்து செல்லப்பட்டார். தண்ணீரில் இழுத்து செல்லபடும்போது சாலையில் இருந்த மின்கம்பத்தை பிடிக்க முயன்றும், அவரால் பிடிக்க முடியவில்லை. அவரை காப்பாற்ற டயர் ட்யூப்புகளை அங்கிருந்தோர் தூக்கி வீசினர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தண்ணீரில் அவர் வேகமாக இழுத்து செல்லப்பட்டார்.

 

இதேபோல் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி வேன், கார்கள் ஆகியவையும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டன. இக்காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் எடுத்து வெளியிட அது சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

கடந்த 2000ம் ஆண்டில் 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை பெய்ததே, ஐதராபாத்தில் அதிகபட்ச மழையாகும். அதையும் விஞ்சும் வகையில் ஹயாத்நகரில் 29.8 சென்டிமீட்டர் மழையும், காட்கேஸ்வர் பகுதியில் 32 புள்ளி 3 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. இதேபோல் நகரின் 35 இடங்களில் 21 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments