ஒரே இரவில் 7 பேரிடம் வழிப்பறி கொள்ளையன் சிக்கியது எப்படி?

0 3713
ஒரே இரவில் 7 பேரிடம் வழிப்பறி கொள்ளையன் சிக்கியது எப்படி?

சென்னையில் ஒரே இரவில் இளம்பெண் உட்பட 7பேரிடம் அடுத்தடுத்து கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி செல்போன்களை பறித்துச் சென்ற வழிப்பறி ஆசாமியை சினிமா பட பாணியில் 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். கத்தியை காட்டி வழிப்பறி ஆட்டம் போட்ட கொள்ளையன் சிக்கியதின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சனிக்கிழமை நள்ளிரவில் வியாசர்பாடியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு வந்த மர்ம நபர், ஊழியர் ஒருவரை கத்தியால் தாக்கி, தனது வாகனத்திற்கு இலவசமாக 5 லிட்டர் பெட்ரோல் நிரப்ப வைத்துள்ளான். பின்னர், அங்கிருந்த மற்ற ஊழியர்களையும் மிரட்டி, சீனிவாசன் என்பவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினான்.

பிறகு வியாசர்பாடி பகுதியில் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றான். பின்னர், அடுத்தடுத்து சர்மா நகர், எழில் நகர், கொடுங்கையூர்- தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, ஓட்டேரி, வில்லிவாக்கம் பகுதிகளில் தனியாக சென்றவர்களின் செல்போன்களை பறித்துக் கொண்டு அவன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

ஒரே இரவில் அடுத்தடுத்து பதிவான 7 வழிப்பறி கொள்ளை குறித்து எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த அடையாளங்கள், வாகன பதிவு எண் அடிப்படையில், 7 வழிப்பறி சம்பவங்களும் ஒரே ஒரு கொள்ளையனால் அரங்கேற்றப்பட்டது தெரியவந்தது. பின்னர், திருடப்பட்ட செல்போன்களின் சிக்னல்களை வைத்து வெவ்வேறு குழுவாக பிரிந்து சென்று போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இறுதியில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பகுதியில் தான் கொள்ளையன் பதுங்கியிருக்க வேண்டும் என ஊகித்த போலீசார், அங்கு முகாமிட்டு ஒவ்வொரு தெருவாக வலைவீசினர்.

அப்போது தான், கொள்ளையன் பயன்படுத்திய "டியோ" இருசக்கர வாகனம் ஒரு வீட்டில் நிற்பதை அடையாளம் கண்ட போலீசார் அந்த வீட்டிற்குள் நுழைந்து, தப்பியோட முயன்றவனை சுற்றிவளைத்தனர்.

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த இவன் அருண் என்பதும், கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகளில் தொடர்புடைய அருண், கடந்த சில நாட்களாக கோவையில் பதுங்கியிருந்து, மீண்டும் சென்னைக்கு வந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அடுத்தடுத்து வழிபறியில் ஈடுபட்ட கொள்ளையனை சினிமா பாணியில் பகல் 12 மணிக்குள் பிடித்து சிறைக்கு அனுப்பிய எம்.கே.பி நகர் போலீசாரை காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments