டீசல் திருட்டுக்கு பின்னணியில் ரவுடிக் கும்பல்..! செய்தியாளருக்கு மிரட்டல்...

0 6436
டீசல் திருட்டுக்கு பின்னணியில் ரவுடிக் கும்பல்..! செய்தியாளருக்கு மிரட்டல்...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புத்துக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடக்கின்ற டீசல் திருட்டு குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ரவுடியின் குரல்பதிவு வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி கொண்டு சேர்ப்பதற்காக உறக்கம் கலைத்து உழைத்தவர்கள் லாரி ஓட்டுநர்கள்.

இப்படிப்பட்ட கடுமையான உழைப்பாளி ஓட்டுனர்களுக்கு மத்தியில், சில லாரி ஓட்டுநர்கள் தங்கள் லாரியில் இருந்து டீசலை திருடுவதற்கு, தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சர் கடை வைத்துள்ள டீசல் கொள்ளையர்களுக்கு துணைபோவது தெரியவந்தது.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி புத்துக்கோவில் பகுதியில் உள்ள டயர் கடை ஒன்றில் சம்பந்தப்பட்ட இரு லாரி ஓட்டுநர்கள் உதவியுடன் காலி தண்ணீர் கேன்களில் டீசல் திருடப்படுவது குறித்து பிரத்யேக காட்சிகளுடன் செய்தி வெளியிடப்பட்டது.

டீசலை திருடி பாதுகாப்பின்றி பதுக்கி வைப்பதால் அசம்பாவிதம் நிகழ்ந்து விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் டீசல் திருட்டு தடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையில் இந்த டீசல் திருட்டு பின்னணியில் ரவுடிக்கும்பல் ஒன்று இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த செய்தியை வெளியிட்டதற்காக, செய்தியாளரை தொடர்பு கொண்ட, டீசல் திருட்டில் ஈடுபடும் ரவுடி, பிரபல அரசியல் கட்சி தலைவரின் பெயரை சொல்லி காருடன் எரித்து விடுவதாக பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தான்.

புத்துக்கோவில் பகுதியில் தனக்கு தெரிய நிறைய சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் பெயர் சொல்ல பயந்த அந்த ரவுடி தகவல் தெரிவித்தான்.

இந்த பகிரங்க மிரட்டல் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவரது அறிவுறித்தலின் பேரில் அம்முலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டீசல் திருட்டு மட்டுமல்லாமல் தற்போது பகிரங்க கொலை மிரட்டல் வழக்கிலும் டீசல் கொள்ளைக்கும்பல் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments