கொரோனா ஆய்வு ஒரு சேம்பிளுக்கு ரூ.1200 கமிஷன்…! மாவட்ட அதிகாரிகள் அட்டகாசம்

0 4516

மக்களிடம் சேகரிக்கப்பட்ட 19 லட்சம் கொரோனா பரிசோதனை மாதிரிகளை, கமிஷனுக்கு ஆசைப்பட்டு தனியார் ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்ததாக  திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளே கொரோனாவை கண்டு கலங்கி நின்ற நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 2 வது இடத்தில் இருந்த தமிழகம், அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர், பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் கூட 6 வது இடத்திற்கு இறங்கி வரவேற்க தக்க நிலையில் உள்ளது.

அந்த அளவுக்கு நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் மூலம் மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தி உடனடியாக அடையாளம் கண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவரைத் தனிமைப்படுத்தி கொரோனாப் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில், கொரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்படும் சளி மாதிரிகளின் முடிவுகளை விரைவாகத் தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, தனியார் ஆய்வகங்களிலும் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.

அந்தவகையில், தமிழகத்தில் 182 மூலக்கூறு ஆய்வகங்கள் செயல்பட்டுவரும் நிலையில் 66 அரசு ஆய்வகங்கள் மட்டுமல்லாமல் 116 தனியார் ஆய்வகங்களுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மாதிரிகளை அனுப்பி வந்தனர்.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 70 லட்சம் ஆய்வுகளில் 51 லட்சம் ஆய்வுகள் அரசு ஆய்வகங்களிலும், 19 லட்சம் ஆய்வுகள் தனியார் ஆய்வகங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவரும் நிலையில் சேகரிக்கப்படும் மாதிரிகளை ஒவ்வொரு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தாலே போதுமானது என்ற நிலையில், தங்களுக்கு வேண்டப்பட்ட தனியார் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைப்பதில் சிலர் ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகின்றது.

அதாவது தனியார் மருத்துவமனையில் ஆய்வுக்கு அனுப்பும் ஒவ்வொரு சளிமாதிரிக்கும் அரசு காப்பீடுத் திட்டத்தின் மூலம் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் முதலில் ஒரு மாதிரிக்கு 200 ரூபாய் எனவும் பின்னர் 500 ரூபாய் எனவும் பணம் பெற்றுக் கொண்டு தனியார் ஆய்வகங்களுக்கு மாதிரிகளை அனுப்பி வைத்த மாவட்ட சுகாதாரத் துறை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் சிலர், கடந்த சில வாரங்களாக ஒரு மாதிரிக்கு 1200 ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு சளிமாதிரிகளை தனியார் ஆய்வகங்களுக்கு அனுப்பிவைப்பதில் அதிதீவிர ஆர்வம் கட்டுவதாக சர்ச்சை எழுந்தது

இதனை ஆய்வு செய்த போது, தென்காசி மாவட்டத்தில் சளிமாதிரிகளை சேகரிக்கும் சுகாதாரத் துறையினர் அதனை ஆய்வு செய்ய அருகில் நெல்லையில் உள்ள அரசு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பாமல், 350 கிலோமீட்டர் தொலைவில் கோயமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்க ஆர்வம் காட்டுவது கண்டறியப்பட்டது.

அது போல காஞ்சிபுரத்தில் அரசு ஆய்வகம் இருக்கும் நிலையில் அங்கிருந்து சென்னை தனியார் மருத்துவமனையின் ஆய்வகத்திற்கு சளிமாதிரிகளை அனுப்பி வந்துள்ளனர். இதன் மூலம் சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின் பேரில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், இது போன்ற தில்லுமுல்லுகளை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு சென்னை மாநகராட்சியில் நடந்த கொரோனா கட்டுப்பாட்டு குழு ஆய்வுக்கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இனி சுகாதாரத்துறையினர் சேகரிக்கும் சளி மாதிரிகளை அரசு மூலக்கூறு ஆய்வகத்திற்கு மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாகவும், இதனை அந்தந்த மாவட்ட பொது சுகாதாரதிட்ட துணை இயக்குனர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை விரைவாக பழைய நிலைக்கு கொண்டு வர பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், ஒரு சில அதிகாரிகள் செய்யும் இதுபோன்ற செய்கைகளால் கொரோனா தடுப்புப் பணியில் மாதக்கணக்கில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட சுகாதாரத்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments