வேலூரில் சி.பி.ஐ சோதனை.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!

0 3037

வேலூர் தி.மு.க எம்.பி கதிர் ஆனந்தின் ஆதரவாளர் என்று கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரில் கதிர் ஆனந்தின் ஆதரவாளர் என்று கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் மற்றும் துரைமுருகன் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத 10 லட்சம் ரூபாயும், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் வீடுகளில் இருந்து 11கோடியே 40லட்சம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன, தாமோதரன் மீது புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற தேர்தலில் கதிர் ஆனந்த் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்நிலையில் வருமானவரித் துறை புகாரின் பேரில் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் மற்றும் இவர்களுக்கு பணத்தை 200 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்து உதவியதாக கனரா வங்கியின் மண்டல முதுநிலை மேலாளர் தயாநிதி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும், காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பத்திலுள்ள பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் 3மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உளவுத்துறை அதிகாரிகள் எனக் கூறி சிலர் அத்துமீறி நுழைந்து மிரட்டியதாக மக்களவை சபாநாயகரிடம் கதிர் ஆனந்த் புகார் அளித்திருந்த நிலையில், அவரது ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments