விஜயகாந்த் உடல்நிலை குறித்து இருவேறு அறிக்கையால் குழப்பம்

0 17019
விஜயகாந்த் உடல்நிலை குறித்து இருவேறு அறிக்கையால் குழப்பம்

விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி மட்டுமே இருந்த நிலையில் அது சரியாகி விட்டதாக தேமுதிக அறிவித்த நிலையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் உடல் நிலை குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், வழக்கமாக 6 மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு விஜயகாந்த் சென்றபோது லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது என்றும், இருப்பினும் உடனடியாக அது சரிசெய்யப்பட்டு விட்டது என்றும் தேமுதிக தெரிவித்தது. தற்போது விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் என்றும் தேமுதிக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 22ஆம் தேதி சோதனையில் உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி சரியாகிவிட்டதாக தேமுதிகவும், கொரோனா இருப்பதாக மியாட் மருத்துவமனையும் அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளதால் அவரது உடல் நிலை குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, பிரேமலதாவிடம், தொலைபேசி வாயிலாக விசாரித்ததாகவும், விஜயகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து, இயல்புநிலைக்கு திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்வதாக, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விழைவு தெரிவித்துள்ளார்.

தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விஜயகாந்த் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த்  கேட்டறிந்தார். இதனிடையே, விஜயகாந்த் வீட்டு முன் கொரோனா தனிமைப்படுத்துதலுக்கான நோட்டீஸ் ஒட்ட எதிர்ப்பு தெரிவித்து,  மாநகராட்சி ஊழியர்களுடன் வீட்டு பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திரும்பிச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள், சிறிது நேரம் கழித்து வந்து நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். ஆனால் நோட்டீசை ஒட்டிவிட்டு நகர்வதற்குள்ளேயே அது கீழே விழுந்துவிட்டது. முன்னதாக, விஜயகாந்த் இல்லத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.  

இதனிடையே தேமுதிக  தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை - சாலிகிராமம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களது வீட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றார். விஜய காந்த் உடல் நிலை குறித்து, வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைக்கும், தேமு திக வெளியிட்ட அறிக்கைக்கும் முரண்பாடு இல்லை என அவர் விளக்கம் அளித்தார். விஜயகாந்த், ஒரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் பிரேமலதா நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments