சீன ஆக்கிரமிப்பில் 38,000 ச.கி.மீ.... 90,000 ச.கி.மீ. பரப்பையும் கோருகிறது

0 2639
சீன ஆக்கிரமிப்பில் 38,000 ச.கி.மீ.... 90,000 ச.கி.மீ. பரப்பையும் கோருகிறது

லடாக்கில் 38 ஆயிரம் சதுரக் கிலோமீட்டர் நிலப்பரப்பைச் சீனா தொடர்ந்து தனது ஆக்கிரமிப்பில் வைத்துள்ளதாகவும், அருணாசலப் பிரதேசத்தில் தொண்ணூறாயிரம் சதுரக் கிலோமீட்டர் பரப்பிற்கு உரிமை கோரி வருவதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய - சீன எல்லைத் தகராறு தொடர்பாக மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

கால்வன் பள்ளத்தாக்கில் ஜூன் 15 அன்று இந்திய நிலப்பகுதியைக் காக்க நிகழ்ந்த சண்டையில் 20 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததையும், ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தப் பிரதமர் நரேந்திர மோடி லடாக் சென்று வந்ததையும் ராஜ்நாத் குறிப்பிட்டார்.

லடாக்கில் 38 ஆயிரம் சதுரக் கிலோமீட்டர் நிலப்பரப்பு தொடர்ந்து சீன ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ஐயாயிரத்து 180 சதுரக் கிலோமீட்டர் நிலப்பரப்பைச் சீனாவுக்குக் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அருணாசலப் பிரதேசத்தில் தொண்ணூறாயிரம் சதுரக் கிலோமீட்டர் நிலப்பரப்பைச் சீனா உரிமை கோருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். சீனாவின் ஆத்திரமூட்டும் செயல்களின்போது இந்திய ராணுவத்தினர் பொறுமையைக் காப்பதாகவும், நமது நிலப்பரப்பைக் காக்க வேண்டியுள்ளபோது துணிச்சலுடன் போரிடுவதாகவும் குறிப்பிட்டார்.

நமது எல்லையைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும், இதில் எவரும் ஐயப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். எல்லைச் சிக்கல் தொடர்பாக இரு நாடுகளும் செய்துள்ள உடன்பாடுகளை 2003ஆம் ஆண்டுக்குப் பின் சீனா மதிக்கவில்லை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments