சென்னையில் ஐந்தில் ஒருவருக்குக் கொரோனா தொற்று... நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகியுள்ளதாக தகவல்!

0 10856

சென்னை மாநகரில் வசிப்பவர்களில் ஐந்தில் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் எனும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ’சீரோ சர்வே’ எனும் ஆய்வை மத்திய அரசு நடத்திவருகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நகரங்களில் வசிக்கும் மக்களின் ரத்த மாதிரிகள் மற்றும் சளி மாதிரிகளைச் சேகரித்து பரிசோதிப்பது இந்த ஆய்வின் முக்கிய பணி.  சென்னையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் சென்னை மாநகராட்சியும் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.  மாதிரிகளை கொண்டு  ஆர்.டி பி.  சிஆர் மற்றும் எலிசா ஆண்டிபாடி கருவிகள் மூலம் ஒருவரின் உடலில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்டுக் குணமாகிவிட்டதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களில் எத்தனை பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும். 

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் 12,405 பேரிடம் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையில் 21.5 சதவிகிதத்தினருக்கு (அதாவது 2673 பேர்) வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மூலம் சென்னை நகரில் ஐந்தில்  ஒருவர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 


சென்னை மாநகர ஆணையர்  ஜி.பிரகாஷ், “சென்னை மாநகரத்தில் எங்கெல்லாம் அதிக நோய்த்தொற்று ஏற்பட்டதோ, அங்கெல்லாம் இப்போது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதால் நோய்ப் பரவல் வேகமும் தற்போது குறைந்துள்ளது. இந்தத் தரவுகள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவும்” என்று கூறியுள்ளார்

சென்னை மாநகரத்தில் மட்டும் சுமார் 80 லட்சம் பேர் வசிக்கிறார்கள். தினமும் நான்கு லட்சம் பேர் வேலை நிமித்தமாக நகருக்குள் வந்து செல்கிறார்கள். இதுவரை சென்னையில் 1,36,000 பேருக்கும் மேல் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்  2670 பேர் இறப்பைத் தழுவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments