13 கொலை – 50 பலாத்காரம் போலீஸ் ரேப்பிஸ்ட் ஜோசப்புக்கு ஆயுள்..! 40 ஆண்டு கழித்து சிக்கியவன்

0 10578

13 கொலைகள், 50 பெண்களிடம் பலாத்காரம் மற்றும் 100 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட போலீஸ் கொலைகாரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளாக தேடப்பட்டவன் டி.என்.ஏ மூலம் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

நான் உன்னை கொல்லப் போகிறேன்... நான் உன்னை கொல்லப் போகிறேன்... என்ற அழுத்தமான டெலிபோன் மிரட்டல் 1976ல் 'தங்க மாநிலம்' என்று அழைக்கப்பட்ட கலிபோர்னியாவில் பலரது தூக்கத்தைக் கெடுத்த கொடூர கொலைகாரன் ஜோசப் டி ஏஞ்சலோவின் குரல்..!

கலிபோர்னியாவில் போலீஸ்காரராக பணிசெய்துவந்த ஜோசப் டி ஏஞ்சலோவுக்கு சிறு வயதில் இருந்தே ஜாம்பி மற்றும் திகில் படங்களின் மீது தீராத பிரியம். ஒரு கட்டத்தில், தான் திரையில் பார்த்ததை நிஜத்தில் நிகழ்த்த இரவு வேளைகளில் முகமூடியுடன் தனியாக இருக்கும் வீடுகளில் புகுந்து அங்கு இருக்கும் ஆண்களை சுட்டுக்கொன்று விட்டு பெண்களை பலாத்காரம் செய்வதை வாடிக்கையாக்கியுள்ளான் சீரியல் ரேப்பிஸ்ட் ஜோசப்..!

குறிப்பாக, ஒதுக்குப்புறாக இருக்கும் வீட்டின் பின்பக்க ஜன்னல் வழியாக முகமூடி அணிந்தபடி உள்ளே நுழையும் ஜோசப், கணவனை சமையல் அறையில் கட்டிபோட்டுவிட்டு, மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு வீட்டில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பதும், கணவன் சத்தமிட்டால் சுட்டுக்கொல்வதும் இவனது வழக்கம் என்கின்றனர்.

பகலில் போலீஸ்காரர் வேலை, இரவில் கொடூரக் கொலையாளி என 1976ல் தொடங்கி பத்தாண்டுகளில் 13 கொலைகள்... 50 பெண்களிடம் பலாத்காரம்... 100 கொள்ளைச் சம்பவங்கள் ஜோசப்பால் நிகழ்த்தப்பட்டவை என்று நீண்ட பட்டியலை நீட்டுகின்றது கலிபோர்னிய காவல்துறை.

சூப்பர் மார்கெட் ஒன்றில் கொள்ளையடிக்கச் சென்றபோது கையும் களவுமாக சிக்கிய நிலையில், ஜோசப்பின் தொடர் குற்றச்செயல்கள் வெளிச்சத்திற்கு வந்ததோடு போலீஸ் வேலையும் பறிபோனது. அந்த வழக்கில் விடுபட்ட பின்னரும், அவனது கைவரிசை தொடர்ந்த நிலையில் அவனை காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை.

40 ஆண்டுகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆண்டு நடந்த குற்றம் தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்து கண்டறியப்பட்ட டி.என்.ஏ மூலம் பழைய குற்றவாளிகளின் டி.என்.ஏவை ஒப்பிட்டு பார்த்த போது, ஏரியில் மீனுக்கு தூண்டில் போட்டுக் கொண்டிருந்த ஜோசப் டி ஏஞ்சலோ வசமாக போலீசிடம் சிக்கிக் கொண்டான்.

கடந்த 2 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் 40 வருடங்களுக்கு முன்பு அந்த இரவில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர்மல்க விவரித்தனர்.

இடையில் தன்னால் நடக்க முடியாமல் அவதிப்படுவது போல ஜோசப் நடித்த நிலையில் அவன் ஜெயில் அறையில் மேலே ஏறி இறங்கும் உடற்பயிற்சி செய்வது அங்குள்ள சிசிடிவி காட்சி மூலம் அம்பலமானது.

இத்தனையையும் செய்துவிட்டு இறுதியில் எல்லாவற்றுக்கும் சேர்த்து தன்னை மன்னித்துவிடுமாறு ஜோசப் பவ்வியமாக ஒரு கும்பிடு போட்டான்.

ஜோசப் செய்த முடிவில்லா குற்றங்களுக்கு ஒன்று மரண தண்டனை கொடுக்க வேண்டும் அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டுமே தவிர விடுதலை கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் அழுத்தமான கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று சீரியல் ரேப்பிஸ்ட் ஜோசப் டி ஏஞ்சலோவுக்கு 74 ஆவது வயதில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

காவல்துறையில் இருந்ததால் போலீசாரின் வழக்கமான துப்பறியும் முறைகளை அறிந்து, சாமர்த்தியமாக தடயங்களை அழித்து சிக்காமல் தப்பியதாகத் தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.

இங்கு மட்டும் அல்ல, எங்கும் இனி இப்படியொரு சீரியல் கில்லர் உருவாக, சீரியசாகவே விடக்கூடாது என்பதே இந்த கொடூரச் சம்பவம் காவல்துறைக்கு உணர்த்தும் எச்சரிக்கைப் பாடம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments