பாஜக தொடர்புடைய நபர்களுக்கு ஃபேஸ்புக் விதிகளில் சலுகை : எந்த அரசியல் கட்சிக்கும் சாதகமாக செயல்படுவதில்லை - பேஸ்புக் விளக்கம்

0 1821
பாஜக தொடர்புடைய நபர்களின் வெறுப்பை தூண்டும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என எழுந்துள்ள புகார் குறித்து, பேஸ்புக் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க நாடாளுமன்ற நிலைக்குழு திட்டமிட்டுள்ளது.

பாஜக தொடர்புடைய நபர்களின் வெறுப்பை தூண்டும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என எழுந்துள்ள புகார் குறித்து, பேஸ்புக் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க நாடாளுமன்ற நிலைக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, வெறுப்பை தூண்டும் பதிவுகள் மீது சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், உலகில் எந்த அரசியல் கட்சிக்கும் சாதகமாக  செயல்படுவதில்லை என்றும் பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் வெறுப்பு, வன்முறையை தூண்டும் பதிவுகள் வெளிடப்பட்டால், அத்தகைய பதிவுகள் நீக்கப்படுவதோடு, சம்மந்தப்பட்டவர்களின் கணக்குகளை முடக்கி வைக்கும் விதிகள் உள்ளன. ஆனால் இந்த விதிகளை, பாஜகவுடன் தொடர்புடைய சில குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக, ஃபேஸ்புக் பயன்படுத்துவதில்லை என புகார் எழுந்துள்ளது.

இந்தியாவில் தன்னுடைய வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு, பாஜக தொடர்புடைய குழுக்களுக்கும், தனிநபர்களுக்கும் ஃபேஸ்புக் இந்தியா நிர்வாகம் சலுகை காட்டியதாக, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை விரிவான செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தது.

இதை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சர்ச்சையை கிளப்பியுள்ளன. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு ஃபேஸ்புக் நிறுவனத்திடம் விளக்கம் கேட்க உள்ளதாக, அதன் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்மன் அனுப்பப்பட்டால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதி நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராகி, புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். இதனிடையே, பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக எழுந்த புகாரை ஃபேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது.

வெறுப்பு பேச்சுகளை ஃபேஸ்புக்கில் தடை செய்துள்ளதாகவும், வெறுப்பு, வன்முறையை தூண்டும் பதிவுகளுக்கு எதிரான விதிகளை  பாரபட்சமின்றி உலகம் முழுவதும் அமல்படுத்துவதாகவும், இதில் கட்சி சார்புக்கோ ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக முடிவெடுப்பதற்கோ இடமில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விதிகள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என தொடர்ந்து தணிக்கை செய்வதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments