ஓபிஎஸ், இபிஎஸ், அமைச்சர்கள் ஆலோசனையை தொடர்ந்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியீடு

0 9023
ஓபிஎஸ், இபிஎஸ், அமைச்சர்கள் ஆலோசனையை தொடர்ந்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியீடு

பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினர், கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தங்களின் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என்றும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இபிஎஸ்-ஓபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக அதிமுக நிர்வாகிகளில் சிலர் எந்தப் பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள் மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய நிலை மீண்டும் ஏற்பட்டுவிடாத வகையில், ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், ஜனநாயக ரீதியில் அதிமுக தலைமை விரிவாக ஆலோசித்து, தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ளும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் அதிமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் ஊடகங்களில் தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும், இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இருவரும் எச்சரித்துள்ளனர்.

கருத்துப் பரிமாற்றங்களை செய்வதன்மூலம் எதையும் சாதிக்கப் போவதில்லை என அறிவுறுத்தியுள்ள இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை, எம்ஜிஆர், ஜெயலலிதா மீது மக்கள் கொண்ட பேரன்பினை தாங்களும் பெற்றிருக்கிறோம் என்பதே திண்ணம் என குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments