ரஷ்யாவின் தடுப்பூசி - அவசர அறிவிப்பா ?

0 11049

Sputnik V என்ற பெயரில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து அதை  பயன்பாட்டுக்கு பதிவு செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னணி நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பூசிக்காக நடக்கும் 165 க்கும் மேற்பட்ட ஆய்வுகளில்,35 தடுப்பூசிகள் பல்வேறு மனித சோதனை கட்டங்களில் உள்ளன. 

இந்த நிலையில் ரஷ்ய அரசு நிறுவனமான கமாலயா இன்ஸ்டிடியூட் உருவாக்கி உள்ள Sputnik V என்ற தடுப்பூசி, பயன்பாட்டுக்கான அரசின் பதிவை பெற்று விட்டதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமது மகள்களில் ஒருவருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டதாகவும், அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி மீது இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் அது கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இறுதிகட்ட சோதனையை நடத்துவதற்கு முன்பாகவே, உலக நாடுகளில் முதலாவதாக தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம் என்ற பெருமைக்காக இந்த தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன் ஆகியன குறித்த மருத்துவ சோதனைகளை மீறி அதை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் ரஷ்யாவை எச்சரித்தது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அதிபர் புதின், இந்த தடுப்பூசி மருத்துவ பணியார்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முதற்கட்டமாக போடப்படும் என கூறியுள்ளார்.

இதனிடையே ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் இறுதி கட்ட சோதனையை புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃ ப் இந்தியா 5000 க்கும் அதிகமானோரிடம் நடத்த அனுமதி பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகளிலும் இறுதிக் கட்ட சோதனையில் உள்ளது.

சீன நிறுவனமான கேன்சைனோ பயாலஜிக்ஸ் நிறுவன தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனைகள் சவூதி அரேபியா, இந்தோனேசியா, சிலி உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments