சிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..!

0 2137
ராமேஸ்வரத்தில் ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சிறுவர், சிறுமியரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், தான் கற்ற சிலம்பக் கலையை இலவசமாக கற்றுகொடுத்து வருகிறார் கொத்தனார் ஒருவர்.

ராமேஸ்வரத்தில் ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சிறுவர், சிறுமியரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், தான் கற்ற சிலம்பக் கலையை இலவசமாக கற்றுகொடுத்து வருகிறார் கொத்தனார் ஒருவர்.

ராமேஸ்வரம் தீவில் உள்ள சம்பை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், கொத்தனார் வேலை செய்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கு முன் சிலம்பம், வாள்வீச்சு, வேல்கம்பு உள்ளிட்ட கலைகளை கற்றுத் தேர்ந்த ஆறுமுகத்துக்கு கொத்தனார் வேலைதான் நிரந்தர பிழைப்பாகிப் போயிருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி, தொலைக்காட்சிகளிலும் செல்போன்களிலும் மூழ்கிக் கிடக்கும் சிறுவர்களைப் பார்த்த ஆறுமுகத்துக்கு தாம் கற்ற கலைகளை அவர்களின் வழியே அடுத்த தலைமுறைக்கு கடத்தினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது. அதன்படி ஆர்வமுள்ள ஐந்தாறு சிறுவர்களை அழைத்து வந்து சிலம்பம், வாள்வீச்சு, வேல்கம்பு கலைகளை கற்றுக்கொடுத்துள்ளார்.

அந்த சிறுவர்களின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் ஏற்படவே, மற்ற சிறுவர்களின் பெற்றோரும் ஆர்வமாக தங்களது பிள்ளைகளைக் கொண்டு வந்து ஆறுமுகத்திடம் சேர்த்துவிட தொடங்கியுள்ளனர்.

தற்சமயம் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தன்னிடம் சிலம்பம் கற்றுக்கொள்வதாகக் கூறும் ஆறுமுகம், கொத்தனார் வேலையை விடுத்து பெரும்பாலான நேரத்தை அவர்களுடனேயே செலவிட்டு வருகிறார். காலை, மாலை என நேரம் ஒதுக்கி இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதனால் உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் நன்றாக பசி எடுப்பதாகவும் இரவில் நன்றாக உறக்கம் வருவதாகவும் கூறும் சிறுவர், சிறுமியர், இந்தப் பயிற்சிகள் தங்களுக்கு தன்னம்பிக்கையோடு உற்சாகத்தையும் அளிப்பதாக கூறுகின்றனர்.

ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற பாரதியின் வரிகளுக்கு உயிரூட்டும் வகையில், இங்கு முழுமையான ஈடுபாட்டோடு சிறுவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆசான் என்று அவர்களால் மரியாதையோடு அழைக்கப்படும் ஆறுமுகமும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பயிற்சிகளை அளித்து வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments