தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

0 1713
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்றவாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று மாலை கனமழை பெய்ததால் நகரின் பல இடங்களிலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மீண்டும் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து சென்றனர்.

அடையாறு, மத்திய கைலாஷ், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, எழும்பூர், பெரம்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக அம்பத்தூரில் 7.1 செ.மீ மழையும், மாம்பலத்தில் 4.6 செ.மீ மழையும் பதிவானது.

ஜெமினி மேம்பாலம், புரசைவாக்கம் கீழ்ப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சென்னையின் புறநகர் பகுதிகளான திருப்போரூர், சிறுசேரி, கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம், கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பாலவாக்கம், நீலாங்கரை, கானத்தூர், கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதல் இடைவிடாமல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏரி, குளங்களில் மழைநீர் நிரம்பி வருவதால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. தெள்ளார், நடுக்குப்பம்,கொரக்கோட்டை, பாதிரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர் நிலைகளில் மழைநீர் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழையால் கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து அமைந்தகரை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு காத்து நின்றன. ஆம்புலன்ஸ் ஒன்றும் போக்குவரத்து செரிசலில் சிக்கிக்கொண்டது. பொதுப் போக்குவரத்து இல்லாததால் பலரும் தங்கள் சொந்த வாகனங்களில் வேலைக்கு செல்வதாலும், மழை காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம், மங்கலம், துரிஞ்சாபுரம், ஆவூர், தண்டராம்பட்டு, மல்லவாடி, கலசபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மிதமான சாரல் மழை பெய்தது. கடந்த 2 நாட்களாகவே இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் 6 மணி நேரமாக மழை பெய்ததால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி,ஐந்தருவி,உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து துவங்கியுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகளான அஞ்செட்டி, தேன்கனிகோட்டை உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால், காவிரி ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியிலிருந்து, 9 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் திறக்கப்படும் நீருடன் மழைநீரும் காவிரி ஆற்றில் கலந்து வருவதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்பரித்துக் கொட்டுகிறது.  

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக, சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 5 இடங்களில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன.

ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால், ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments