குழந்தை கடத்தல் முயற்சி.. புலியை போல் பாய்ந்த தாய்..!

0 2612

டெல்லியில் 4 வயது மகளை கடத்த முயன்றவர்கள் மீது ஒரு புலியை போல் பாய்ந்து தாய் ஒருவர் கடுமையாக போராடி காப்பாற்றினார். அதே சமயம் நமக்கேன் வம்பு என ஒதுங்காமல் சமயோஜிதமாக செயல்பட்ட அக்கம்பத்தினரினால் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் போலீசாரிடம் சிக்கினர். பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

டெல்லி ஷகர்பூர் பகுதியிலுள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கரவாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். அதற்காக தண்ணீர் எடுக்க தாய் உள்ளே சென்ற நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தையை கடத்திக் கொண்டு தப்ப முயன்றுள்ளனர்.

தண்ணீருடன் வெளியே வந்த தாய், இதனை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு நிற்காமல், விரைந்து செயல்பட்டு குழந்தையை கடத்த முயன்றவர்கள் மீது ஒரு புலியை போல் பாய்ந்தார். வேகமாக செயல்பட்டு கடத்தல்காரர்களிடம் இருந்து குழந்தையை மீட்டதுடன் அவர் ஒதுங்கவில்லை.

கடத்தல்காரர்களை பிடித்துவிட வேண்டும் என்று அவர்களை தப்ப விடாமல் இருசக்கர வாகனத்தை பிடித்து நிறுத்த முயன்றார். இதனால் நிலைகுலைந்து போன ஒரு கடத்தல்காரன் வாகனத்திலிருந்து இறங்கி தப்பியோட, மற்றொருவனோ ஒரு வழியாக சமாளித்து இருசக்கரவாகனத்துடன் தப்பிச் சென்றான்.

நடந்தவற்றை கவனித்த அக்கம்பக்கத்தினர் ஒருவர் கடத்தல்காரர்களை துரத்தி ஓட, மற்றொருவரோ சமயோசிதமாக செயல்பட்டு சாலையோரம் நின்றிருந்த இருசக்கரவாகனத்தை இழுத்து சாலை நடுவே நிறுத்தினார். மேலும் இருசக்கரவாகனத்தில் வந்தவனையும் தள்ளிவிட்டார். இதனால் கடத்தல் காரர்கள் இருவரும் தாங்கள் வந்த இருசக்கரவாகனத்தையும், கொண்டு வந்த பையையும் அங்கேயே விட்டு விட்டு தப்பியோடினர்.

இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடத்தல்காரர்கள் விட்டு சென்ற இருசக்கரவாகனத்தையும், பையையும் பறிமுதல் செய்த போலீசார், பையிலிருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.

இருசக்கரவாகனத்தின் பதிவு எண் போலி என்பதையும் கண்டறிந்தனர். ஆனாலும் அதன் உரிமையாளரான தீரஜ் என்பவனை கண்டுபிடித்து விசாரித்ததில், குழந்தையின் தந்தையின் சகோதரரே கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியது வெளிச்சத்துக்கு வந்தது. துணி வியாபாரியான குழந்தையின் தந்தையிடமிருந்து 35 லட்சம் வரை பணம் பறிக்கும் நோக்கில் குழந்தையை கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட குழந்தையின் தந்தையின் சகோதரரும், இரு சக்கரவானத்தை கொடுத்து உதவிய அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். கடத்தலை அரங்கேற்றியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். துணிச்சலாக செயல்பட்டு குழந்தையை மீட்ட தாய்க்கும், கடத்தல்காரர்களை தடுக்க முயன்ற அக்கம்பக்கத்தினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments