சிங்கிள் ரூம் சிங்கிளுக்கே..! திருந்திய ஓயோ நிர்வாகம்..! துபாய் ரிட்டர்ன்ஸ் நிம்மதி

0 5470

சென்னை பெரியமேட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கிருந்த ஓட்டல்களில் ஒரே படுக்கையில் இரு நபர்களை தங்கவைத்திருந்த நடைமுறையை மாற்றிக் தனித் தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக ஓயோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

சவுதியில் இருந்து துபாய் வழியாக சார்ட்டட் விமானத்தில் சென்னை திரும்பிய 200 பேர் சென்னை பெரிய மேட்டில் ஓயோ நிறுவனத்தில் கட்டுப்பாட்டில் உள்ள 3 ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சவுதியை சேர்ந்த ரிசயத் டிராவல்ஸ் நிறுவனம் பயணிகளுக்கான கட்டணத்தை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து முன் கூட்டியே பெற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது. இரு நபர்களை ஒரே அறையில் தங்க வைப்பதற்கு 7 நாட்களுக்கு 14 ஆயிரம் ரூபாயும், ஒரு அறையில் தனி நபராக தங்குவதற்க்கு 10 ஆயிரத்து 500 ரூபாயும் என ஓயோ நிர்வாகத்திற்கு சவுதி டிராவல்ஸ் நிறுவனம் செலுத்தியதாக கூறப்படுகின்றது.

சென்னை மாநகராட்சியின் ஒப்புதலுடன் கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமுக்காக சென்னையில் 50 ஓட்டல்களின் நிர்வாகத்துடன் ஓயோ நிர்வாகம் ஒப்பந்தம் போட்டு, சில மாதங்களாக பூட்டிக் கிடந்த ஓட்டல்களை பெற்று வெளி நாட்டில் இருந்து நாடு திரும்புவோரை அதில் உள்ள அறைகளில் தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் கிரீன் கேட்ஸ் ஓட்டல் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ள ஓயோ நிறுவனம், அங்கு ஒரே அறையில் அதுவும் ஒரே படுக்கையில் சம்பந்தமில்லாத இருவரை தங்கவைத்த சம்பவம் செய்தியாக வெளியானது.

இது கொரோனாவை தடுப்பதற்கு பதில் பரப்புவதற்கு வழிவகுத்து விடும் என்று அதிகாரிகள் எச்சரித்ததை தொடர்ந்து ஓயோ நிறுவனம் தற்போது சிங்கள் ரூம் சிங்கிளுக்கே என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஒரே அறையில் இருவராக இருந்தவர்களை தனி தனி அறைகளில் தங்க வைத்திருப்பதாகவும் விளக்கம் அளித்தனர். இந்த சம்பவத்திற்கும் கிரீன் கேட்ஸ் ஓட்டல் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என்றும் ஓயோ தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சவுதியில் உள்ள ரிசயத் டிராவல்ஸ் நிறுவனம், அளித்த தகவலின் பேரிலேயே ஒரே அறையில் இருவரை தங்கவைக்க நேரிட்டதாகவும் ஓயோ நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மொத்தத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளையும்,அறிவுறுத்தலையும் பின்பற்ற சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் இல்லையேல், தனி நபர் இடைவெளி இல்லாமல் ஒரே அறையில் பலரை தங்க வைத்து, வெளி நாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா பரவ வழி ஏற்படுத்தி கொடுத்தது போலாகி விடும் என்கின்றனர் ஓட்டல்களில் தங்கி இருப்போர்.

அதே நேரத்தில் ஓட்டல்களில் தனிமைப்படுத்த பட்டோருக்கு தேவையன வசதிகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments