‘கோவிட் பார்ட்டி’ - கொரோனாவை சோதிக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த சோதனை!

0 17535

கொரோனா வைரஸ் உண்மையிலேயே இருக்கிறதா, இல்லையா என்று சோதனை செய்ய, ‘கோவிட் பாட்ர்டி’யில் கலந்துகொண்ட 30 வயது பெண் ஒருவர் வைரஸ் தாக்கி இறந்த சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறி உள்ளது.

‘கொரோனா வைரஸ் என்று எதுவுமே இல்லை; ஊடகங்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்தி’ என்று பல மேலை நாட்டு இளைஞர்கள்  சிலர் கருதுகின்றனர். அதனால், அவர்கள் பொது முடக்கத்துக்கு எதிராகக் குரல்கொடுத்துப் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தின் ஒரு வடிவம் தான் ’கோவிட் பார்ட்டி’. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பலர் கோவிட் பார்ட்டி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

மருத்துவப் பரிசோதனையில் கோவிட் வைரஸ் தொற்று உறுதியான நபர் தனது நண்பர்களை அழைத்து ‘கோவிட் பார்ட்டி’ வைப்பார். இந்தப் பார்ட்டியில் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள், நோய்த் தொற்று ஏற்படாதவர்கள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து மது பருகி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். இந்த கலாச்சாரம் அமெரிக்கா முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், டெக்சாஸ் மாகாணம், சான் அண்டோனியாவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர் வைத்த கோவிட் பார்ட்டியில் பங்குகொண்ட 30 வயது பெண் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட சோதனையில் கொரோனா நோய்த் தொற்று உறுதியானது. தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்ட அந்த பெண் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

இறப்பதற்கு முன்பு செவிலியரிடம், “கொரோனா வைரஸ் உண்மையிலேயே இருக்கிறதா என்று சோதனை செய்ய நினைத்து கோவிட் பார்ட்டியில் கலந்துகொண்டேன். நான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டேன். கொரோனா நோய்த் தொற்று என்பது புரளி என்று நினைத்தேன். ஆனால், அது உண்மையாகிவிட்டது. நான் இறக்கப்போகிறேன்” என்று பரிதாபமாகக் கூறி உயிரை விட்டுள்ளார்.

அமெரிக்காவில் கோவிட் பார்ட்டி கொண்டாடும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக அதிகமாகி உள்ளது. இதை மருத்துவர்கள் பலரும் எச்சரித்து உள்ளனர்.

“கோவிட் பார்ட்டியில் யாரும் கலந்துகொள்ளாதீர்கள். அது அபாயகரமானது. இந்தப் பார்ட்டியில் பங்குகொள்வது முன்கூட்டியே இறப்பை வரவழைத்துக் கொள்வதற்குச் சமம்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் நியூயார்க் சிட்டியில் உள்ள லெனாக்ஸ் ஹில் மருத்துவமனையின் அவசரகால மருத்துவரான டாக்டர் ராபர்ட்.

அமெரிக்காவில் மட்டும் இதுவரை 3.3 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி, 137,000 பேருக்கும் மேல் இறப்பைத் தழுவி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தவரை மாஸ்க் அணிந்து, தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்து, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் அறிவுரையைக் கேட்காமல் பலர் கோவிட் பார்ட்டியில் கலந்துகொண்டு உயிரை இழப்பது பரிதாபமாகவே உள்ளது.

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments