மருத்துவருக்கு பிளாஸ்மா தானம்.. 25 வயது இளைஞருக்கு பாராட்டு..!

0 5232

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சேலத்தை சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஒருவருக்கு, அத்தொற்றில் இருந்து மீண்டு வந்த 25 வயது இளைஞர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து காக்கும் கடவுள்கள் என மருத்துவர்களை உலகமே போற்றி வருகிறது. கொரோனாவை முன்னின்று எதிர் கொள்ளும் இது போன்ற மருத்துவர்களில் சேலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரான அவருக்கு பிளாஸ்மா தானம் தேவை என அவரது குடும்பத்தினர் சமூக வலைதளம் மூலம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை அறிந்து, 25 வயதான சென்னை இளைஞர் ஒருவர் பிளாஸ்மா தானம் வழங்கியுள்ளார். 

அந்த இளைஞர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சையது அமீர் ஆவார். கடந்த மே மாதம் கொரோனாவால் அவரும், அவரது குடும்பதினரும் பாதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மருத்துவ சிகிச்சையில் அனைவரும் குணமடைந்து மீண்டு வந்தனர்.

பிளாஸ்மா தானம் செய்த இளைஞர் அமீர் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அலங்காரம் செய்யும் தொழில் செய்பவர் ஆவார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அவரது தொழில் முற்றிலும் முடங்கிவிட தற்போது தனது நண்பர்களை கொண்ட அமைப்பினரோடு சேர்ந்து கொரோனா பாதித்தோருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து தொற்று ஏற்பட்டவர்கள் உடலில் செலுத்துவது பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது. இந்த சிகிச்சை முறை மூலம் தமிழகத்தில் இதுவரை 18 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது தமிழக அரசு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கியை தொடங்கியுள்ளதோடு, அத்தொற்றில் இருந்து குணமடைந்த இளைஞர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments