தாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்..! 8 போலீஸ் கொலைக்கு பதிலடி

0 23637

30 ஆண்டுகளாக அரசியல் ஆதரவுடன் ரவுடி ராஜ்யம் நடத்தி வந்த தாதாவை, எஸ்.பியாக பொறுப்பேற்ற இருபத்து ஐந்தே நாட்களில் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி. 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடிக்கும்பல் கூண்டோடு சம்ஹாரம் செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

கணக்கில் வராத படுகொலைகள், ஆள்கடத்தல், பணம் பறிப்பு, போதைபொருள் கடத்தல் என்று தெலுங்கு சினிமாவில் வரும் அதிபயங்கர வில்லன் போல உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் வாழ்ந்து வந்தவர் தாதா விகாஸ்துபே.

பாதுகாப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட துபே, தனது மனைவியை சமாஜ்வாடி கட்சியில் இணைத்துள்ளார்.

இரு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சிக்கு வந்ததால் விஜாஸ்துபேவின் அதிகார கொடிதான் அங்கு உச்சத்தில் பறந்துள்ளது. இவனது செயல்பாடுகள் எல்லாம் அர்ஜூன் பண்டிட் படத்தில் வரும் ரவுடியான நாயகன் போல இருக்கும் என்பதால் இவனை எல்லோரும் துபே பண்டிட் என்றே அழைத்துள்ளனர்.

தலைகனத்தில் ஆடிய விகாஸ் துபேவுக்கு பா.ஜ.கவின் ஆட்சி மாற்றம் சற்று கிழியை கொடுத்தாலும், அதிலும் சிலரை ஆதரவாளர்களாக வளைத்துபோட்டு சத்தமில்லாமல் ரவுடித்தனம் செய்து வந்துள்ளான்.

இந்த நிலையில் சகரன்பூரில் எஸ்.பியாக இருந்த தினேஷ்குமார், கடந்த ஜூன் மாதம் 15 ந்தேதி கான்பூர் எஸ்.பியாக பொறுபேற்றுள்ளார். தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த இந்த சிங்கம் பொறுபேற்றது முதலே அங்குள்ள ரவுடிகளுக்கு எதிரான வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையின் கால் தடம் நெருங்ககூட அஞ்சிய தனது வீட்டை போலீசார் சுற்றி வளைத்த தகவல் அறிந்ததும் ஆத்திரம் அடைந்த விகாஸ் துபே, தனது அடியாட்களுடன் சேர்ந்து சினிமாவில் வருவது போல போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் டி.எஸ்.பி உள்பட 8 போலீசார் பலியாகினர். இந்த ஒரே தாக்குதலின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட தாதாவானான் விஜாஸ் துபே.

இதையடுத்து காவல்துறையை சேர்ந்தவர்களை காவுவாங்கிய தாதாவுக்கு தக்க பதிலடி கொடுக்க கான்பூர் எஸ்.பி .தினேஷ்குமார் தலைமையிலான தனிப்படை களமிறங்கியது. சமாஜ்வாடி கட்சியில் செல்வாக்கோடு இருந்த அவனது மனைவியை கைது செய்ததோடு, அவனது வீட்டையும் வாகனங்களையும் ஜே.சி.பி கொண்டு இடித்து நசுக்கி தரைமட்டமாக்கினர்.

முதலில் அவனது மூளையாக செயல்பட்ட இரு கூட்டாளிகளை சுட்டு வீழித்திய போலீசார், உச்சையினியில் கோவில் ஒன்றில் பதுங்கி இருந்த விகாஸ் துபேவை சாதாரன அடிதடி வழக்கில் சிக்கிய குற்றவாளி போல சாலையில் அடித்து இழுத்து வந்தனர்

போலீசாரால் உயிருடன் பிடிக்க இயலவில்லை என்ற அவப்பெயர் வந்து விடகூடாது என்ற இலக்குடன் சென்ற எஸ்.பி. தினேஷ்குமாரின் தனிப்படை விகாஸ் துபேவை சாலையில் வைத்து இழுத்து தலையில் ரெண்டு தட்டுதட்டி விசாரணைக்கு அழைத்து செல்வதையும் பகிரங்கபடுத்தினர்.

விகாஸ் துபேவின் கெட்ட நேரத்தை முன் கூட்டிய குறித்த போலீசார் மழையால் போலீஸ் வாகனம் கவிழ்ந்ததாகவும், அப்போது போலீசை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் தாதா விகாஸ் துபேவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் கூறி 30 வருட ரவுடி சாம்ராஜ்யத்தை அதிரடி என்கவுண்டர் மூலம் முடித்து வைத்தனர்.

தமிழகத்து சிங்கம் தினேஷ்குமார் ஐ.பி.எஸ். போட்ட ஸ்கெட்சில் விகாஸ் பண்டிட் கும்பலுக்கு மட்டுமல்ல தற்போது உ.பியில் உள்ள ஒட்டு மொத்த ரவுடிகளையும் ரெட் கார்னரில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது யோகி அரசு.

முளையிலேயே கிள்ளியெறிய வேண்டியவர்களை பெரும் ரவுடியாக வளரவிட்டால் அரசியல் பலம் கொண்டு மக்களை ஆட்டிப்படைக்கும் நிலை வந்துவிடும் என்பதற்கு சான்றாக வாழ்ந்த தாதாவின் வாழ்க்கை 33 வயது இளம் காவல் அதிகாரியால் முடித்து வைக்கப்பட்டிருப்பது வரவேற்கதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments