கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப் பார்வை விரிப்பது ஏன்?

0 6630

சித்த மருத்துவர்கள் யாரேனும், கொரோனாவுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால், அதனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அரசு, சந்தேக பார்வையை விரிப்பது ஏன் ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வைத்தியர் தணிகாசலத்தின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வி.எம் வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தணிகாசலம் தன்னிடம் கொரோனா தொற்றுக்கு மருந்து உள்ளது என தெரிவிக்கும் போது, அதை பரிசோதிப்பதை விடுத்து, ஏன் அவரை கைது செய்யவேண்டுமென கேள்வி எழுப்பினர்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"' என்ற குறளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சித்த மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறினாலே சந்தேகப்படும் சூழல் நிலவுவதாக கவலை தெரிவித்தனர்.

மத்திய - மாநில அரசுகளால் சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டுவதாகவும் அது புறக்கணிக்கப் படுவதாகவும் தெரிவித்த நீதிபதிகள், (தமிழகத்தில் உள்ள அனைத்து) அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், அலோபதி சிகிச்சை என்ற பெயரில் கபசுர குடிநீர் கொடுத்து சித்த மருத்துவ சிகிச்சை தான் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்?, அதனை பரிசோதித்ததில் எத்தனை மருந்துகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக தெரியவந்துள்ளது?, அவற்றில் எத்தனை மத்திய  ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது?, என்பது உள்ளிட்ட  கேள்விகளை மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் எழுப்பினர்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை வழக்கில் தானாக முன்வந்து இணைத்ததோடு, நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை  23ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments