தமிழக மாணவிக்காக கேரள அரசு இயக்கிய ஆம்புலன்ஸ்... ஸ்ரீதேவி 95 சதவிகித மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!

0 5978

கொரோனா ஊரடங்கின்போது, தமிழக பழங்குடியின மாணவி ஒருவர் தேர்வு எழுதி விட்டு தமிழகம் திரும்ப கேரள அரசு தனி ஆம்புலன்ஸை இயக்கியது. அந்த மாணவி ஸ்ரீதேவி பத்தாம் வகுப்பில் 95 % மதிப்பெண் பெற்று பாஸாகியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக சரணாலய பகுதியில் உள்ள பூச்சுக்கொட்டம்பாறையில் வசிக்கும் பழங்குடி இனப் பெண் ஸ்ரீதேவி. இவர் கேரளாவில் உள்ள சாலக்குடி  நாராயண்காடி மாடல் ரெசிடென்ஸியல் பள்ளியில் பத்தாவது படித்து வந்தார். பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வும் தொடங்கவும் கொரோனா லாக்டௌன் செய்யப்படவும் சரியாக இருந்தது. ஹாஸ்டலில் தங்கி ஸ்ரீதேவி தேர்வு எழுதினார். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு ரத்து செய்யப்பட தனி ஆம்புலன்ஸில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு ஸ்ரீதேவி அழைத்து வரப்பட்டு பெற்றோரிடத்தில் ஒப்படைக்கப்பட்டார். பிறகு, எஞ்சியிருந்த தேர்வு நடந்த போது, தமிழகத்திலிருந்து சாலக்குடி செல்ல ஸ்ரீதேவிக்கு கேரள அரசு தனி பேருந்து ஏற்பாடு செய்திருந்தது. தற்போது 10 - ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், ஸ்ரீ தேவி 95 % மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

ஸ்ரீதேவி தேர்வு முடிவு குறித்து கூறியதாவது, "95 % க்கு மேல ஏ ப்ளஸ் கிரேடு வாங்கி நான் பாஸ் ஆகியிருக்கறது, எனக்கு நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. என்னோட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிடுச்சி" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

ஸ்ரீதேவி வசிக்கும் மலைக்கிராமத்தில் மின்சாரம் எதுவும் கிடையாது. அங்கு மொபைல் போன் சிக்கனல்கள் கூட கிடைக்காது. எங்காவது செல்ல வேண்டும் என்றால் பல கி.மீ தூரம் நடந்துதான் செல்ல வேண்டும். அதனாலேயே இந்தக் கிராம குழந்தைகள் தங்கள் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிடுவர். ஆனால், கடும் சிரமத்துக்கு மத்தியிலும் போராடி பள்ளி சென்று படித்து வந்த ஸ்ரீதேவி அதற்கான பலனை அடைந்துள்ளார்.

ஸ்ரீ தேவியின் அப்பா செல்லமுத்து, " என்னோட பொண்ணு பரீட்சைல நல்ல மார்க்கு வாங்கிருக்கறதுல எனக்கு ரொம்பவுமே மகிழ்ச்சி. என் மகள் என்ன படிக்கணும்னு ஆசைப்படுறாளோ அத படிக்க வைப்பேன்" என்கிறார்.

"தன் மகளைப் படிக்கவைக்க வேண்டும் எனும் செல்லமுத்துவின் முடிவு தைரியமானது. அந்த முடிவை ஸ்ரீதேவி கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டாள். இனி ஸ்ரீதேவி பல பழங்குடியின குழந்தைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்வாள்" என்கிறார் தமிழ்நாடு பழங்குடியின சங்கத்தின் துணைத் தலைவர் சண்முகம்.

ஸ்ரீதேவி பழங்குடி இன பெண்குழந்தைகளின் விடிவெள்ளியாக மாறியுள்ளார் தற் போது, ஸ்ரீதேவியின் உயர்படிப்பு செலவை ஏற்றுக் கொள்ள பலரும் முன்வந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments