நாளை முதல் பல தளர்வுகளுடன் அமலுக்கு வருகிறது சென்னையில் ஊரடங்கு

0 13763

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முதல்  கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடனும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.

நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும். தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சல் சேவையுடன் மட்டும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. காய்கறிக் கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய நகை கடை, ஜவுளி கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன், ஏ.சி.வசதியின்றி செயல்படலாம்.

மேலும், கடைகளில் வாடிக்கையாளர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவேண்டும். மற்ற செயல்பாடுகளைப் பொறுத்தவரை, கடந்த ஜூன் 19-க்கு முன்னர் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் நாளை முதல் சென்னையில் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளோடு இயங்கலாம்.

சென்னை மண்டலத்திற்குள் நாளை முதல் பொதுமக்கள் இ-பாஸ் இன்றி பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பயணிகளோடு இயங்க அனுமதி, சைக்கிள் ரிக் ஷாக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. முடிதிருத்தும் நிலையங்கள், பியூட்டி பார்லர்கள் குளிர்சாதன வசதியின்றி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments