இன்ஸ்டாகிராமில் கோடிகள் சுருட்டிய இம்சை காமுகர்கள்..! இன்ஸ்டா பெண்களே உஷார்

0 17872

ஜெர்மனியில் படித்துவரும் கீழக்கரை மாணவன் ஒருவன், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி கோடிக் கணக்கில் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாக் மெயில் கும்பலில் இருவர் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக புகார் எண்ணை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் இந்த இன்ஸ்டாகிராம் பிளாக்மெயில் இம்சையர்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அந்த பெண் பதிவிட்ட புகைபடங்களை எடுத்து அதனை ஆபாச படங்களுடன் மார்பிங் செய்து அதனை இந்த பெண்ணிற்கு அனுப்பி வைத்து இது போல தங்களிடம் ஏராளமான படங்கள் இருப்பதாகவும் இதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் தனது நண்பர்களுடன் தோழியாக பழக வேண்டும் என்று முதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவன் மிரட்டியுள்ளான்.

அவனது மிரட்டலுக்கு பயந்து அவர்களுடன் இன்ஸ்டாகிராமில் பழகிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை ஆடைகள் இல்லாமல் வீடியோவில் தோன்றும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது. 

முதலில் மிரட்டியவனை போலவே, மேலும் சிலரும் அந்த பெண்ணின் ஆடையில்லா வீடியோவை அனுப்பி மிரட்டியதோடு, அந்த பிளாக் மெயில் கும்பல் கொஞ்சம், கொஞ்சமாக 7 1/2 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளது. 

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் இந்த புகார் சிறப்பு சைபர்குற்றப்பிரிவு காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. கூகுள்பே, பேடீம், மற்றும் போன்பே போன்றவற்றில் பணப்பரிவர்த்தனை நடந்த செல்போன் நம்பர்களை கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் ஏராளமான போலி கணக்குகளை தொடங்கி 6 பேர் கொண்ட பிளாக்மெயில் கும்பல் பெண்களை மிரட்டி பணம் பறித்து வருவதை கண்டறிந்தனர்.

கீழக்கரையை சேர்ந்த முகமதுமைதீன் என்பவன் தான் இந்த பிளாக் மெயில் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான். ஜெர்மனி நாட்டில் தங்கி படித்து வரும் முகமதுமைதீன், ராமநாதபுரத்தில் இருப்பது போல போலியான கணக்கு தொடங்கி வசதியான வீட்டு பெண்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைபடங்களை நோட்டம் விட்டு அவர்களின் புகைபடங்களை ஆபாசபடமாக சித்தரித்து மிரட்டி வந்துள்ளான்.

நண்பர்களான சென்னை பாசித் அலி, புதுச்சேரி முகம்மது இப்ரஹிம் நூர், நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசூல், நாகப்பட்டினம் முகம்மது ஜாசிம் ஆகியோருடன் சேர்ந்து அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளான்.

பிளாக் மெயில் மாணவர் முகம்மது மைதீன் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்து அங்கு உல்லாசமாக வாழ்ந்துவருவதாக அவனது கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இன்ஸ்டாகிராம் பெண்களிடம் பணம் பறிப்பதில் தீராத தொல்லையாக இருந்த நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசூல் ஆகிய இருவர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் மற்றவர்களை தேடிவரும் நிலையில் ஜெர்மனியில் படிக்க சென்ற இடத்தில் பக்கா பிளாக்மெயிலராக உருமாறி இருக்கும் முகம்மது மைதீன் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பிளாக்மெயிலர்கள் மிரட்டினால் பெண்கள் தைரியமாக காவல்கண்காணிப்பாளர் வருண்குமாரின் 9489919722 என்ற பிரத்யேக எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்றும்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இஷ்டப்பட்டு இன்ஸ்டாகிராம் செல்லும் பெண்கள் காமுக இம்சையர்களிடம் சிக்கி கஷ்டப்பட்டு கண்ணீர் வடிப்பது தொடர்கதையாகி வருவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments