கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் இறுதிச் சடங்கு : உடல்கள் நல்லடக்கம்

0 9643

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் இறுதிச் சடங்கு சாத்தான்குளத்தில் நடைபெற்றது. ஏரளாமானோர் திரண்டதால், 700க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பெனிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கடையில் இருந்தபோது ஊரடங்கு உத்தரவை மீறி, இரவில் கடை திறந்து இருப்பதாக கூறி மூட சொன்னதால் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்தனர். அங்கு உடல்நலக்குறைவால் முதலில் பென்னிக்சும் மறுநாள் காலை அவரது தந்தை ஜெயராஜூம் உயிரிழந்தனர்.

காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியதால்தான் இருவரும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்களது உடல் நேற்று இரவு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

 காவல்துறையினர் மீது வழக்குப் பதிந்தால் மட்டுமே உடலை வாங்குவதாக அறிவித்த உறவினர்கள் இன்று காலை தமிழக அரசு சம்பவந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை வைத்து உடலை வாங்குவதாக தெரிவித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.

இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு சாத்தான்குளத்தில் இருவரின் உடல்கள் வந்தபோது அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிபிஐ விசாரணை வேண்டும், நீதி வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து அவர்களது இல்லத்திற்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு சிறிது நேரம் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் வியாபாரிகள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்பு மேல சாத்தான்குளம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 700க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments