'ஹீரோவாகக் காட்டிக்கொள்ள முனைந்தீர்கள்; இப்போது சட்டத்தை எதிர்கொள்ளுங்கள்!' - ஷாருக்கானுக்கு நீதிபதி குட்டு...

0 32432

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. தலைநகர் டெல்லியிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் மவுஜ்பூர் சவுக் பகுதியில்  நடந்த போராட்டத்தின் போது, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டியதாக ஷாருக்கான் பதான் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு ஷாருக்கான் பதான் மனு அளித்தார்.

நீதிபதி சுரேஷ்குமார் கெயித்திடத்தில் மனு விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனுவில் தன் தந்தைக்கு வயது 76 ஆகிறது. முதிய வயதில் அவரை பார்த்துக் கொள்ள யாருமில்லை. எனவே, தனக்கு ஜாமீன் அளிக்குமாறு ஷாருக்கான் கோரியிருந்தார். ஷாருக்கான் பதான் வழக்கறிஞர் அக்ஸர் கான், 'கர்ப்பமாக உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவியும் ஒருங்கிணைப்பாளருமான சூஃபுரா சர்க்காருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஜாமீனை முன்வைத்து ஷாருக்கானுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

ஆனால், வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி சுரேஷ்குமார் கெயித், ''குற்றம்சாட்டப்பட்டவரின் நோக்கம் தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்வதிலேயே இருந்தது. அதனால், இப்போது அவர் சட்டத்தையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். குற்றமிழைத்த போது எல்லோரையும் மறந்து விட்டார். இப்போது, அவருக்கு  வயதான பெற்றோர் நினைவுக்கு வந்து விட்டதா?” என்று கேள்வி எழுப்பினார். அதோடு, ஷாருக்கான் பதானுக்கு ஜாமீன் அளிக்கவும் மறுத்து உத்தரவிட்டார்.

பிப்ரவரி 24- ந் தேதி சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பு கும்பல் டெல்லி  மவுஜ்பூர் சவுக் பகுதியில் மோதிக் கொண்டன. காலை 11 மணியளவில்  ஷாருக்கான் பதான், துப்பாக்கியால் போலீஸ் கான்ஸ்டபிள் தீபக் தாகியாவை மிரட்டினார். இந்த வழக்கில் ஷாருக்கான் பதான் கைது செய்யப்பட்டு, அவரிடத்திலிருந்து 7.65 எம்.எம். ரக பிஸ்டல் கைப்பற்றப்பட்டது. துப்பாக்கியில் இரண்டு குண்டுகளும் இருந்தன. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments