இந்தியாவில் ஒரேநாளில் 16,922 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

0 2696

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 105ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும் அதையும் மீறி நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 922 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது.

இது ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இதுவரை இல்லாத வகையில் அதிகமாகும். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 73ஆயிரத்து 105 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 418 பேர் உயிரிழந்தனர். இதையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 14 ஆயிரத்து 894ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 2 லட்சத்து 71ஆயிரத்து 697 பேர் குணமடைந்துள்ளனர்.

இறந்தவர்கள், குணமடைந்தோர் போக ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 514 பேர் இப்போதைய நோயாளிகளாக உள்ளனர்.  இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 4 புள்ளி ஒன்று ஆறு விழுக்காட்டினருக்குத் தான் வென்டிலேட்டர் உதவி தேவைப்படுவதாக மத்திய நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 24 வரை மொத்தம் 75 லட்சத்து 60 ஆயிரத்து 782 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 871 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments