தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு மேலும் 5 நகராட்சிகளில் அமலாகிறது

0 18090

தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம் உள்ளிட்ட மேலும் 5 நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு இன்று மாலை 6 மணி முதல்  அமலுக்கு வருவதால் தேவையான  பொருள்களை வாங்கி இருப்பு வைக்க மக்கள் ஆர்வம் காட்டுவதால்   கடைகளில் கூட்டம் அதிகமாகவுள்ளது. 

தேனி மாவட்டத்தில் தேனி,சின்னமனூர், கம்பம் ,போடி, பெரியகுளம், கூடலூர், பாளையம் ஆகிய 7 நகராட்சிகள் உள்ளன. மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த பெரியகுளம் நகராட்சி பகுதியில் 20ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாளையம் தவிர்த்து தேனி,சின்னமனூர், கம்பம் ,போடி, கூடலூர் ஆகிய மேலும் 5 நகராட்சி பகுதிகளுக்கும் இன்று மாலை முதல் முழு ஊரடங்கு மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்திருந்தார்.

அதன்படி அந்த 5 நகராட்சிகளிலும் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி இருப்பு வைக்க ஆர்வம் காட்டுவதால் தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளில் கூட்டம் அதிகமாகவுள்ளது.

முழு ஊரடங்கில் பழங்கள், பால் மற்றும் குடிநீர், சமையல் எரிவாயு, காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மருத்துவமனைகள், மருந்து பொருட்கள், மருத்துவ பரிசோதனை மையங்கள், அவசர ஊர்தி, ஆகியவற்றுக்கு நேர கட்டுப்பாடுடன் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக மட்டும் ஆட்டோ டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசு அலுவலகங்கள், பொது விநியோக கடைகள், இறைச்சிக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்கு நேரக் கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் டீக்கடைகள், பேக்கரிகள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பெட்டிக்கடைகள், பர்னிச்சர் கடைகள், எழுது பொருள்கள், காலணிகள் விற்பனை செய்யும் கடைகள், பேன்ஸி ஸ்டோர், மொபைல் மற்றும் பழுது நீக்கும் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைக்காக வெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளை பொறுத்தவரையில் தேனி மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாது என்றும் பழனி மற்றும் திண்டுக்கல் வழித்தடங்களில் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments