கொரோனா நோயாளிகளை கண்டறிய உதவும் மருத்துவ முகாம்

0 1038

சென்னை மாநகராட்சி சார்பில்  நடத்தப்படும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மூலம் சுமார் 6,500 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பநிலையிலேயே நோய் தொற்றை கண்டறிவதற்கு இந்த மருத்துவ முகாம்களின் பங்களிப்பு என்ன மற்றும் அதன் செயல்பாடு குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

சென்னை மாநகராட்சியில் வார்டுக்கு 2 டாக்டர் என நியமிக்கப்பட்டு, 200 வார்டுகளிலும் 400 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இது தவிர, ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவ முகாம் 280 என மொத்தம் 680 என்ற எண்ணிக்கையில் நாள்தோறும் முகாம் நடத்தப்பட்டு தெரு தெருவாகச் சென்று பரிசோதனையில் இறங்கியுள்ளனர்.

முதலில் குறைவான எண்ணிக்கையில் நடந்து வந்த இந்த முகாம்கள், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பையும், பலனையும் தந்ததால் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

தெர்மல் ஸ்கேனருடன் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் மாநகராட்சியின் மைக்ரோ குழுவினர் காய்ச்சல், சளி என எந்த அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக இந்த காய்ச்சல் பரிசோதனை முகாம்களுக்கு அழைத்து வருகின்றனர்.

முகாமில் அவர்களை பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் பரிசோதிக்கும் மருத்துவர் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கிறதா என்றும் ஆய்வு செய்கிறார். சாதாரண காய்ச்சல், சளி போல் அல்லாமல் கொரோனாவிற்கான அறிகுறி போல் இருந்தால், அருகில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கிறார். மருத்துவ முகாமிற்கு வரும் அனைவருக்கும் விட்டமின் மாத்திரைகள், டாக்ஸி சைக்ளின், ஜிங் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

ஒரு மருத்துவ குழு நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 பேர் வரை காய்ச்சல் சளி இருக்கிறதா என்று பரிசோதிக்கின்றனர். குறிப்பாக முதியவர்களுக்கு முக்கியம் கொடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பகுதியென சுழற்சி முறையில் முகாம் அமைத்து பரிசோதித்து வருகின்றனர்.

கடந்த 25 நாட்களில் நடத்தப்பட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இந்த காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மூலம் 3 லட்சத்து 32 ஆயிரம் பேரை சாதாரண முறையில் பரிசோதனை செய்ததில் அவர்களில் 9 ஆயிரத்து 600 பேர் கொரோனா அறிகுறியுடன் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சுமார் ஆறாயிரத்து 500 பேருக்கு வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் நோய் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கொரோனா பாதித்தவர்களை குறிப்பாக வயதானவர்களை பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விடுவதால் நோய் தொற்று பரவலையும், உயிரிழப்பையும் தடுப்பதற்கு இந்த காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் பெரும்பங்களிப்பை செய்கிறது என்பது மருத்துவர்களின் கருத்து.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments