சோழகங்கன் எழுப்பிய அழகிய கோயில்; ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது தேர்கள்! - பூரி ஜகந்நாதர் கோயில் பற்றிய அறிந்திடாத, அரிய தகவல்கள்...

0 5665
ந்தியாவில் உள்ள புகழ்பெற்ற  புண்ணியத் தலங்களில் ஒன்று, ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோயில். ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் இங்கு  நடைபெறும் தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்றது. பல்வேறு மாநிலங்களிருந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வடம் பிடித்து தேர்களை இழுத்து மகிழ்வர்... பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் தேர்த் திருவிழா,  கொரோனா பிரச்னையால் இந்த ஆண்டு பல்வேறு நிபந்தனைகளுடன் ஆரவாரம் ஏதுமின்றி அமைதியாகத் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேண்டும் வரங்களைப் பக்தர்களுக்கு அளித்துவரும் பூரி ஜெகந்நாதர் கோயில் பற்றி அறிந்துகொள்வோம்...
image

ஒடிசா மக்களின் வாழ்வியலோடு கலந்தவர் பூரி ஜெகந்நாதர். ஒடிசா மாநிலத்தின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழாவாகவும் பூரி ஜெகந்நாதர் கோயில் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது. கலிங்கத்தில், 11 - ம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் மரபைத் தோற்றுவித்த அனந்தவர்மன் சோழகங்கன் என்பவரால் தான் தற்போதைய பூரி ஜெகந்நாதர் ஆலயம் எழுப்பப்பட்டது. அனந்தவர்மன் சோழகங்கன் சோழப் பேரரசன் வீரராஜேந்திரனின் மகள் வழி பேரன். இவனது மாமன் தான குலோத்துங்க சோழன் அனந்தவர்மன் சோழர்களுக்கு திரை செலுத்த மறுத்ததால் தான் புகழ்பெற்ற கலிங்கப் போர் கருணாகர தொண்டைமானால் மேற்கொள்ளப்பட்டது. கலிங்கமும் தீக்கிரையாக்கப்பட்டது என்பது வரலாறு. கீழைக் கங்கர்களால் எழுப்பப்பட்ட மற்றொரு புகழ்பெற்ற கோயில், கோனார்க் சூரியனார் கோயில். 

மகாபாரதத்தில் மாளவ நாட்டை அரசாண்ட பரதன் -  சுனந்தா தம்பதியருக்குப் பிறந்த இந்திரத்யும்னன் என்பவனால் எழுப்பப்பட்ட ஆலயம் இது என்கிறது, கோயில் தல புராணம். ஸ்கந்த புராணம், பிரம்ம புராணம் ஆகியவற்றில் ஜெகந்நாதர் கோயில் பற்றி கூறப்பட்டிருக்கிறது. வரலாற்றுச் சிறப்பையும் புராணச் சிறப்பையும் ஒருங்கே பெற்ற திருக்கோயில் பூரி, ஜெகந்நாதர் ஆலயம். ஒடிசா மாநிலத்தில், கடற்கரையில் ஒய்யாரமாக, அரண்மனை போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள கோயில் இது. இந்த ஆலயத்தில் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா (கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி) ஆகியோர் மூலவர்களாக எழுந்தருளியிருக்கிறார்.  இவர்களுடனும் கிருஷ்ணரின் சுதர்சன சக்கரமும் உள்ளது. ஜெகந்நாதர் ஆலயத்தைச் சுற்றிலும் சிறியதும் பெரியதுமாக முப்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.
image

இந்த ஆலயத்தில் மூலவர்கள் மூவரும் மரத்தில் செய்யப்பட்டவர்கள்.  மேலும், ஓர் ஆண்டில் பயன்படுத்திய தேர் அடுத்த ஆண்டு பயன்படுத்தப்பட மாட்டாது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காடுகளிலிருந்து வெட்டப்படும் மரங்கள் கொண்டு புதிய தேர்கள் செய்யப்படுகின்றன. அந்தத் தேரிலேயே மூவரும் பவனி வருவார்கள். தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, நந்திகோஷா என்று அழைக்கப்படும் 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகந்நாதரும்; தலத்வாஜா என்று அழைக்கப்படும் 14 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பாலபத்திரரும்; தர்பாதவனா என்று அழைக்கப்படும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருளுவர்.  

திருவிழா நடைபெறும் ஒன்பது  நாளும் ஒடிசா, பூரி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் 'படாதண்டா' என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகந்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.புதிய தேர்களில் கிருஷ்ணர், பலராமர், சுபத்திரை ஆகியோரின் உற்சவ மூர்த்தங்களை அமரவைத்து நகரை வலம் வருவார்கள். வழியில், இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தையான மவுசிமா கோயிலில் ஓய்வு எடுப்பார்கள். அங்கிருந்து ஒன்பதாம் நாளில் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். 
image
 
புராணக் கதைகளின் படி, ஒருமுறை லட்சுமி தேவி பூரி நகரை விட்டுச் சென்றுவிட்டாள். லட்சுமி தேவி சென்றதனால் செல்வம் அனைத்தையும் இழந்துவிட்ட ஜெகந்நாதரும் பலராமரும் ஏழைகளானார்கள். அடுத்து யாசகம் மேற்கொண்டு வயிற்றுப் பசியைப் போக்கினார். இந்த காலத்தில் தங்களது தங்கை சுபத்ரா தேவியை மவுசிமா தேவியின் வீட்டுக்கு அனுப்பி வைத்துப் பாதுகாத்தனர். கடற்கரைப் பட்டினமான பூரியில் ஒருமுறை ஆழிப் பேரலை தாக்கி, வெள்ளம் சூழ்ந்த போது கடல் நீரில் பாதியைக் குடித்து பூரியைக் காப்பாற்றினாள் மவுசிமா தேவி. இந்த மவுசிமா தேவியே சிவபெருமானுக்கு கபால மோட்சம் அளித்த அன்னபூரணி என்றும் பக்தர்கள் வணங்குகிறார்கள். அதனால், இந்ம பெண் கடவுளை  சம்ஹ க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் பூரியின் காவல் தெய்வமாகவும்; அதிஷ்ட தேவியாகவே வழிபடப்படுகிறாள்.

இந்த புராண நிகழ்வின் காரணமாகவே இன்றளவும் ஜெகந்நாதர் தனது குடும்பத்துடன் அத்தை வீட்டில் தங்கிச் செல்கிறார். பக்தர்கள் நன்றிக்கடனாக 'போடா பித்தா' நைவேத்யம் படைத்தது வழிபடுகிறார்கள். அத்தை வீட்டுக்குச் செல்லும் ஜெகந்நாதரின் தேரை இழுத்தாள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகும், வறுமை அகலும், வாழ்க்கை செழிப்படையும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. அதன்பொருட்டே பூரியில் ஒவ்வொரு வருடமும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு தேர் வடம் பிடிப்பது வழக்கம்...
 
image

வங்காள அரசன் சுலைமான் கிராணியின் தளபதி காலா பாஹத் அலைஸ் கான் 1568 - ம் ஆண்டில் பூரி ஜெகந்நாத் கோயிலைத் தாக்கியபோது முதன்முதலில் கோயில் தேரோட்டம் தடைபட்டது.  அன்றிலிருந்து,  கடந்த 425 ஆண்டுகளாக நடைபெறும் தேர்த் திருவிழா பல்வேறு படையெடுப்புக்களால் 32 முறை நின்றிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சங்குகள் முழங்க, யானைகள் பிளிற, கொம்புகள் எக்காளமிட, பக்தர்களின் 'ஜெய் ஜெகந்நாத்' என்ற பரவச முழக்கத்துடன் ஜெகந்நாதர் கோயிலிலிருந்து கம்பீரமாகப் புறப்படுவார். ஆனால், இந்த ஆண்டு சம்பிரதாயத்துக்காக மட்டும் தனது ரத யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். இந்த ஆண்டு, கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாட்டுடன் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. வரலாற்றில் பூரி ஜெகந்நாதர் பக்தர்களே இல்லாமல் பூசாரிகள், சேவகர்கள் மற்றும் காவலர்களால் மட்டும் ரத யாத்திரை மேற்கொள்கிறார்.
உலகையாளும் ஜெகந்நாதரின் அருளினால் நோய்கள் நீங்கி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியும் செழிப்பும் பெருகட்டும்!
 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments